சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் பாடல் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
சொற்பொருள்:
- சாற்றுங்கால் – அறிவித்தல்
- நீதி – உண்மை வழி (இறைவன் நெறிப்படி, அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன்)
- மேதி – உலகம்
- இட்டார் – தானம் செய்பவர்கள்
- இடாதார் – தானம் செய்யாதவர்கள்
- பட்டாங்கு – இரு பொருள் உள்ளது; ஒன்று உண்மை, மற்றொன்று விளையாட்டாக, கேலியாக சொல்வது.
விளக்கம்:
இந்தப் பாடலில், அவ்வையார் மனிதர்களை சாதி, மதம், மொழி, மற்றும் இனம் எனப் பிரிப்பது எவ்வளவு தவறானது என்பதை எடுத்துரைக்கிறார். நீதி வழுவா நெறிமுறை என்பது, இறைவன் நெறியைப் பின்பற்றும் ஒரு உண்மை வழி. அதாவது, ஒரே குலம், ஒரே இறைவன் என்ற திருமூலரின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அவ்வையார் சொல்வது உலகில் உள்ள மனிதர்களில் சாதி, மதம், மொழி போன்ற அடையாளங்களால் பிரித்தல் கூடாது என்பதாகும்.
அவ்வையார் மேலும், "இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்" எனக் கூறி, தானம் செய்பவர்களை உயர்ந்தவர்கள் எனக் கருதுவர்; அதேசமயம் தானம் செய்யாதவர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
பட்டாங்கு எனும் சொல்லை பயன்படுத்தி, உண்மை என்னும் பொருளில் சொன்னாலும் சரி, விளையாட்டாகக் கூறினாலும் சரி, தானம் செய்யாதவர்களை இழிகுலம் எனக் குற்றம்சாட்டுகிறார்.
அவ்வையார் காட்டுவது, உண்மையான உயர்வு என்பது அறநெறி மற்றும் உண்மை நெறிமுறையில் வாழ்ந்து காட்டுவது! சாதி, மதம், மொழி போன்ற வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு பேதம் பிரிப்பது அல்ல!
திருமூலரின் கீழே உள்ள பாடலும் பிறருக்கு தானம் கொடுத்து வாழ்பவர்களால் மட்டும் தான் உண்மையானத்தை அடைந்து முக்தி நிலையை அடைய முடியும் என்பதை தெளிவாக காட்டுகிறது
திருமந்திரப் பாடல்:
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.
சொற்பொருள்:
- உள்ளம் - ஆன்மா
- பெருங்கோயில் - வழிபடுவதற்குரியது
- ஊனுடம்பு - மாமிச பிண்டம்
- ஆலயம் - ஆ + லயம்; ஆ - பசுவான உயிர், லயம் - அழிதல்
- வாய் கோபுர வாசல் - கதவுடன் கூடிய நுழைவாயில்
- காளா - கா + ஆ; கா - பாதுகாப்பு, ஆ - பசுக்களான உயிர்
- மணி - வைரம் போன்ற பொக்கிஷம்
- விளக்கு - ஞானம்
விளக்கம்:
உள்ளம் பெருங்கோயில் என்றால் ஆன்மாவே வழிபாட்டிற்கு உரியது;
பசுக்களான உயிர்களின் ஊனுடம்பு அழிவதற்கு உரியது;
வள்ளல் பிரான் என்றால் பிறருக்கு உதவுபவர் என்று பொருள்.
வாய் கோபுர வாசல் என்றால் கதவுடன் கூடிய நுழைவாயில்.
நாம் அனைவரும் ஆன்மா என்ற உண்மையை உணர்ந்து, உடம்பு அழிந்து போகும் என்பதை புரிந்து, வாழும் பொழுது செல்வத்தை சேர்த்து சேர்த்து வைக்காமல் பிறருக்கு கொடுத்து வாழ்பவருக்கு மோட்சத்தின் கதவு திறக்கப்படும் என்பதுதான் பொருள்.
காளா = கா + ஆ; கா என்றால் பாதுகாப்பு, ஆ என்றால் பசுக்களான உயிர். ஆன்மாதான் அனைத்தும் என்று உணர்ந்தவருக்கு, உடல் அழியும் என்று தெள்ளத் தெளிந்தவருக்கு, வாழும்பொழுது பிறருக்கு கொடுத்து வாழ்பவருக்கு, மாயையான புலன்கள் இடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும் ஞானம் என்ற பொக்கிஷம் ஆன்மாவில் ஒளிரும்!
சிவாய நம! அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!


Comments
Post a Comment