சாய் அருளால் அபிராமி அந்தாதி விளக்கம்!
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே
பொருள் விளக்கம்
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே
→ கொன்றை மலரும், சண்பக மலரும் சூடி பார்வதியை தன் பாதியாக கொண்டிருக்கும் சிவசக்தியின் மகனான கணபதியே!
உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
→ ஏழு உலகத்தையும் உருவாக்கிய பெருமை உடைய அபிராமியின் அந்தாதி (தலை முதல் பாதம் வரை - முதலும் முடிவும்).
→ அபிராமி அந்தாதி அதாவது அன்னையின் தலை முதல் பாதம் வரை - உலகத்தின் முதலும் முடிவுமான அன்னை, எப்பொழுதும் என் சிந்தையில் இருக்கும் அன்னை அபிராமியைப் பற்றிப் பாட
கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே
→ கருமை நிற உடல் உடைய கணபதியை வணங்குகிறார் அபிராமி பட்டர்.
சிறப்பு குறிப்பு
இந்த அபிராமி அந்தாதி பாடல் முதல் பாடல் முடிவு பெற்ற வார்த்தையிலிருந்து இரண்டாவது பாடல் தொடங்குகின்றது.
முதலும் முடிவும் அபிராமி என்பதனை உணர்த்தும் அற்புதமான இந்த பாடல்களை புனைவதற்கு
அபிராமியின் மைந்தனான இடையூறுகளை நீக்கி வெற்றியை கொடுக்கும் கணபதியை வேண்டுகிறார் அபிராமி பட்டர் 🙏🙏🙏 ஓம் சாய்
அபிராமி அந்தாதி – 1வது செய்யுள் விளக்கம் ✨
செய்யுள்
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே.
சொற்பொருள் & உவமைகள்
-
உச்சித் திலகம் – தலையின் மேல்
-
உணர்வுடையோர் – தன்னிலே சக்தியைக் கொண்டவனும்
-
மதிக்கின்ற மாணிக்கம் – குளிர்ச்சியான கெளஸ்துபம் என்ற மாணிக்கத்தையும்
-
மாதுளம்போது – அழகின் திரு உருவமான தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியை
-
மலர்க்கமலை – தாமரை மலரில் தோன்றியவனுமான பிரம்மனும்
-
மின்கொடி – பிரகாசமான என்றும் இளமையான
-
மென்கடிக் குங்கும தோயம் – தொட்டாலே குங்கும நிறத்தில் சிவப்பவளும்; அதாவது அந்த அளவுக்கு மென்மையானவளும் அதே சமயம்
-
விதிக்கின்ற மேனி – உலகை ஆளும் வலிமைப் படைத்தவளும்
விரிவான பொருள்
-
கிழக்கில் உதிக்கும் சிவந்த நிறமான சூரியனை தன்னுடைய தலையில் சூடியவனும்,
-
தன் இடப்பாக்கத்தில் சக்தியை கொண்டவனும்,
-
சந்திரனைப் போன்ற குளிர்ச்சியை உடைய கெளஸ்துபம் என்ற மாணிக்கத்தையும்,
-
அழகின் திரு உருவமான தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியை இதயத்தில் கொண்டிருப்பவனான விஷ்ணுவும்,
-
தாமரை மலரில் தோன்றியவனுமான பிரம்மனும் துதிக்கின்ற,
-
மிகப் பிரகாசமான ஒளி போன்றவளே அபிராமி.
அபிராமியின் சிறப்பு
-
தொட்டாலே குங்கும நிறத்தில் சிவப்பவளும் – அந்த அளவிற்கு மென்மையானவளும்,
-
அதே சமயம் உலகையாலும் வலிமை படைத்தவளும்,
-
மாய இருளை நீக்கும் ஒளியானவளும் ஆவாள் அபிராமி.
இவ்வாறு இந்த செய்யுள் அபிராமியின் அழகையும், கருணையையும், வலிமையையும் எடுத்து சொல்கிறது.
துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
இந்த பாடல் இந்த உலகில் உள்ள அனைத்தும் அபிராமியே என்பதை குறிக்கும் ஒரு அற்புதமான பாடல். துணை என்றால் காவல் காக்கும் காவலாளியும் அவளே! தொழும் தெய்வமும் அவளே! பெற்ற தாயும் அவளே! உலக இன்பத்தில் சிக்க வைக்கும் மாயா சக்தியும் அவளே! உலகத்தில் உள்ள அனைத்தையும் விட அவளே! இளமையானவளும், வேர்போல் பழமையானவளும் அவளே! பனிமலர் பூங்கணை போல் மென்மையானவளும் அவளே! கரு போல் நுண்மையானவளும், மலை போல் மிகப் பெரிதும் அவளே! தீமையும் அந்த தீமையை அடக்கும் அங்குசமும் அவளே! இயக்கமும் அவளே! அந்த இயக்கத்தை தடுத்து நிறுத்துபவளும் அவளே! இப்படி எல்லாமுமாவும் இருப்பவள்தான் திரிபுரசுந்தரி என்று மிக அற்புதமாக பிரபஞ்சமாய் இருப்பவள் முழுக்க முழுக்க திரிபுரசுந்தரி என்று அபிராம பட்டர் பாடியிருக்கிறார். இங்கு தமிழை வியந்து பாராட்டுவதா, அதை புரிந்து நான்கு வரிகளில் இவ்வளவு அழகாக அனைத்தும் இறைவன் என்பதை அற்புதமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, அதில் பாடல் நயம் தொனிக்க பாடி இருக்கும் அந்த அற்புத திறமையை பாராட்டுவதா! இவை அனைத்தையும் புரியாமல் அனைத்தையும் மேலோட்டமாய் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவளின் மாயையில் சிக்கி இருக்கும் நமக்கு விழிப்புணர்வை கொடுக்கும் ஒரு பாடலாக இந்த பாடலின் விளக்கம் அமைகிறது! எவருக்கு புரிகிறதோ அவர் இந்தப் பிறவியின் சுழற்சியில் இருந்து விடுபடுவர்! சிவாய நம
துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும்,
சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் –
பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும்,
மென் பாசாங் குசமும், கையில் அணையும்
திரிபுர சுந்தரி – ஆவது அறிந்தனமே.
இந்தப் பாடல் இந்த உலகில் உள்ள அனைத்தும் திரிபுர சுந்தரியே என்பதை குறிக்கும் ஒரு அற்புதமான பாடல்.
-
காவல் காக்கும் காவலாளியும் அவளே!
-
தொழும் தெய்வமும் அவளே!
-
பெற்ற தாயும் அவளே!
-
உலக இன்பத்தில் சிக்க வைக்கும் மாயா சக்தியும் அவளே!
-
உலகத்தில் உள்ள இன்ப துன்பம் என்னும் மாயையும் அவளே!
- இளமையானவளும், வேர்போல் பழமையானவளும் அவளே
- பனிமலர் பூங்கணை போல் மென்மையானவளும் அவளே! சிலை போல் கடினமானவளும் அவளே!
- கரு போல் நுண்மையானவளும், மலை போல் மிகப் பெரியதும் அவளே!
- தீமையும், அந்த தீமையை அடக்கும் அங்குசமும் அவளே!
- இயக்கமும் அவளே! அந்த இயக்கத்தை தடுத்து நிறுத்துபவளும் அவளே!
இப்படி எல்லாமுமாவும் இருப்பவள்தான் திரிபுரசுந்தரி — என்று மிக அற்புதமாக பிரபஞ்சமாய் இருப்பவள் முழுக்க முழுக்க திரிபுரசுந்தரி என்று அபிராம பட்டர் பாடியிருக்கிறார்.
இங்கு தமிழை வியந்து பாராட்டுவதா,
அதைப் புரிந்து நான்கு வரிகளில் இவ்வளவு அழகாக அனைத்தும் இறைவன் என்பதை அற்புதமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, அதில் பாடல் நயம் தொனிக்க பாடி இருக்கும் பட்டரின் அந்த அற்புத திறமையை பாராட்டுவதா!
இவை அனைத்தையும் புரியாமல் அனைத்தையும் மேலோட்டமாய் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அவளின் மாயையில் சிக்கி இருக்கும் நமக்கு விழிப்புணர்வை கொடுக்கும் ஒரு பாடலாக இந்த பாடலின் விளக்கம் அமைகிறது!
எவருக்குப் புரிகிறதோ அவர் இந்தப் பிறவியின் சுழற்சியில் இருந்து விடுபடுவர்!
சிவாய நம 🙏
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால்,
மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் மாயை என்னும் இருளுக்கு பின்னால் ஒளியாக ஒளிரும் அபிராமியை அபிராமி பட்டர் இறைவன் அருளினால் மறைத்தல் நீக்கப்பட உணர்ந்தார். எவரும் அறியா மறையை என்றால் பக்குவப்படாத ஒவ்வொருவரும் உணராத ஒளி என்று பொருள். தன்னில் மறைந்திருக்கும் ஒளியை உணர்ந்து தன் முழு கவனத்தையும் அபிராமியின் திருவடியின்பால் செலுத்தினேன் என்று சொல்கிறார். அவ்வாறு செலுத்தாத மனிதர்களை கண்டு பயந்து விலகினேன் என்று சொல்கிறார். ஏனெனில் அவ்வாறு இறைவனையும் இறைவன் அடியவர் பெருமையையும் எண்ணாதவர்கள் பேசாதவர்கள் விலங்குகள் போல் நரகத்தை நோக்கி செல்கிறார்கள். எனவே அவர்களை விட்டு பிரிந்தேன் என்று சொல்கிறார். நமக்குள் ஒளிந்திருக்கும் இறையை உணரும் பொழுது வாழும் பொழுதும் உள்ளத்தில் ஆனந்தம், ஆன்மா உடலை விட்டு பிரியும் பொழுதும் ஆனந்தம். அவ்வாறு பக்குவப்படாத உணராத மனிதர்கள் மாயையினால் வாழும் பொழுதும் நிறைவில்லாமல் நரக வாழ்க்கை வாழ்கிறார்கள், இறந்த பின்பும் நரகத்தையே நோக்கி செல்கிறார்கள் என்பது உட்பொருளாக அமைகிறது. சிவாய நம
சிவாய நம, குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் நான்காவது பாடலின் உட்பொருள் விளக்கம்
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!
பூலோகத்தில் வாழும் மனிதர்களும் விண்ணுலகில் வாழும் தேவர்களும் பல சித்திகளை பெற்ற முனிவர்களும் உன் திருவடியை பணிந்து வணங்கும் கருணை நிறைந்தவளே! தன்னுடைய தலையில் கொன்றைப் பூ அணிந்த வரும், குளிர்ச்சியான சந்திரனை வைத்திருப்பவரும் கங்கையையும் பாம்பையும் அணிந்திருப்பவருமான இறைவனான சிவனும் நீயும் என்னுடைய உணர்வில் எப்பொழுதும் ஐக்கியமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர். நாமும் அவ்வாறே வேண்டுவோம். உணர்வில் இறைவனை உணர்ந்து விட்டால் வாழும் வாழ்க்கை இறைவன் அளித்த வரம் என்பதை உணர்ந்து இந்த பிறவியில் என்னென்ன கடமைகளை செய்ய வைக்க இந்த உடலை கொடுத்திருக்கிறாரோ அதை அந்த இறை உணர்வோடு செய்யும்பொழுது எத்தனை ஜென்ம சஞ்சித கர்மா என்றாலும் அழிந்துவிடும். ஆகாமிய கர்மாக்களும் நம்முடைய கணக்கில் சேராது. பிறவா பெருநிலையை அடைவோம்! சிவாய நம
*குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் ஐந்தாவது பாடலுக்கு விளக்கம்* சிவாய நம அன்னை அபிராமி - இந்த அன்னை என்ற சொல்லின் அற்புதத்தை நான்கு வரியில் விளக்கும் மிக அற்புதமான ஒரு பாடல். இந்தப் பாடலை உள்வாங்கும் பொழுது, நாமும் அன்னையின் இடுப்பில் மார்பில் எல்லாக் கவலையும் மறந்து பால் குடிக்கும் ஒரு குழந்தையாக மாறுவோம். அனுமான் சொல்லி இருக்கிறாராம் நான் அன்னையின் மார்பில் பால் குடிக்கும் குழந்தை. இப்படி பால் குடித்துக் கொண்டிருக்கும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். அதனை உறுதிப்படுத்தும் பாடலாக அபிராமி பட்டரின் இந்தப் பாடல் அமைகிறது.
*பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,*
*வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்*
*அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை, அம்புயமேல்*
*திருந்திய சுந்தரி அந்தரி, பாதம் என் சென்னியதே.*
*பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும்* - மூன்று உலகங்களும் புகழும் உயர்ந்த புகழை உடையவள் - அது ஏன் என்று கீழே பார்ப்போம்.
*புணர்முலையால்* - அம்மாவின் மார்பில் குழந்தை தன்னை மறந்து பால் குடிப்பது பற்றி கீழே பார்ப்போம். அம்மாவின் மார்பில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை —
அது உலகின் மிகத் தூய்மையான, மிக நெருக்கமான பந்தம்.
அந்த தருணத்தில், குழந்தை பசித்திருப்பதை மறந்து,
அம்மாவின் உடலின் வெப்பத்தையும், இதயத் துடிப்பையும் உணர்கிறது. பால் என்பது வெறும் உணவு அல்ல —
அது அம்மாவின் அன்பின் வடிவம், அவள் உயிரின் ஓர் அங்கம்.
ஒவ்வொரு சொட்டிலும் குழந்தைக்கு பசியோடு சேர்ந்து
அன்பும் பாதுகாப்பும் கருணையும் ஊற்றாகச் செல்கின்றன. குழந்தையின் சிறிய விரல்கள் அம்மாவின் மார்பைத் தழுவிக் கொண்டு,
அம்மா மெதுவாகத் தாலாட்டு பாடுகிறாள்,
அந்த மென்மையான இசை குழந்தையின் ஆன்மாவுக்கே உறங்கச் சொல்லும். அந்த நொடியில்,
அம்மாவுக்கும் குழந்தைக்கும் உலகம் வெளியில் இல்லை —
அந்த அன்பின் வட்டத்துக்குள் மட்டுமே.
*வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி* - அன்னையின்அழகான பாதுகாப்பான இடுப்பு
ஒரு குழந்தைக்கு அம்மாவின் இடுப்பு என்பது உலகில் மிகப் பாதுகாப்பான இடம்.
அம்மா தன் கைகளால் குழந்தையைத் தூக்கி, இடுப்பின் மேல் வைத்து அணைத்துக் கொண்டால்,
அது வெறும் தூக்குதல் அல்ல — அது ஒரு அன்பின் கோட்டை. அம்மா வேலை செய்யும்போதும், சமையலறையில் இருந்தும்,
வீட்டு வேலைகளுக்கிடையில் கூட, குழந்தை இடுப்பில் இருந்தால்
அவள் மனம் அமைதியாக இருக்கும், குழந்தையின் மனமும் பாதுகாப்பாக இருக்கும். குழந்தையின் முகம் அம்மாவின் மார்புக்கு அருகில்,
அம்மாவின் இதயத் துடிப்பு அந்தச் சிறு உள்ளத்திற்கு இசையாகக் கேட்கும்.
அந்த இடத்தில் குழந்தைக்கு பயம் இல்லை, பசி மறந்து போகும்,
உலகின் எத்தனையோ சத்தங்களும் அங்கே மெலிதாகி விடும். அம்மாவின் இடுப்பில் இருக்கும் குழந்தை —
தன் உலகின் எல்லாமும் அங்கேயே இருப்பதாக உணர்கிறது.
அவள் கைகள் ஒரு கேடயம், அவள் இடுப்பு ஒரு தாங்கும் தூண்,
அவள் இதயம் ஒரு முடிவற்ற அன்பின் கடல் *வார்சடையோன் அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை* - தன்னுடைய குழந்தைகளை மட்டுமல்ல கணவரையும் பாதுகாப்பவள், சிவன் அருந்திய நஞ்சை அமுதம் ஆக்கியவள்.
. “அந்தரி” = உயர்ந்த நிலைமையில் இருந்து அருள்பவள் அன்னையின் இடுப்பில் பாதுகாப்பாக இருக்கும் குழந்தை, தன்னை மறந்து ஒன்றி பால் குடிக்கும் குழந்தையை தாய் எப்படி பாதுகாப்பாளோ அப்படி இந்த உலகத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள். அவள் எப்படி பாதுகாக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவன் அருந்திய நஞ்சை எப்படி தடுத்து அவரைக் காப்பாற்றினாள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அந்தரியின் திருவடியை அபிராமி பட்டர் மனம் உருகி பணிந்து வணங்குகிறார். நாமும் அப்படிப்பட்ட அன்பான கருணையான அதேசமயம் நம்மையெல்லாம் பாதுகாக்கும் வலிமை உடைய அந்த அற்புதமான அபிராமி திரிபுரசுந்தரியின் திருவடியைப் பணிந்து வணங்குவோம்! இப்படிப்பட்ட அற்புத பாடலை கொடுத்த அபிராம பட்டரின் திருவடியையும் பணிந்து வணங்குவோம். சிவாய நம
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் ஆறாவது பாடலுக்கு விளக்கம் : சிவாய நம
சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம், சிந்துர வண்ணப்பெண்ணே,
முன்னிய நின்அடியாருடன் கூடி, முறைமுறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே - என்னுடைய தலை உன்னுடைய பொன் போன்ற திருவடிகளில்! என்னுடைய சிந்தையில் உன்னுடைய திருமந்திரம் திரும்பத் திரும்ப உன்னையே நினைத்து சொல்கிறது. வழிகாட்டும் உன்னுடைய அடியாருடன் கூடி உன்னை எண்ணி தினமும் பாராயணம் செய்கிறோம் இன்று இறையருளால் அபிராமி பட்டர் சொல்கிறார். அன்னையின் திருவடிகளையும் அபிராமி பட்டரின் திருவடிகளையும் பணிந்து போற்றுவோம். சிவாய நம
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் ஏழாவது பாடலுக்கு விளக்கம் :
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய், சிந்து ரானன சுந்தரியே தயிரை கடையும் மத்து முன்னும் பின்னும் வட்டமாய் சுற்றி சுற்றி வருவது போல பிறவி என்னும் சுழலில் என் ஆன்மா சிக்கித் தவிக்கிறது. தளர் என்றால் மனமிரங்குதல்; தளர்விலதோர் என்றால் நெஞ்சில் இரக்கம் இல்லாமல் என்னை விட்டு விடாதே. என்னை காப்பாற்றும் வண்ணம் மனதில் எண்ணம் கொள்வாய்! தாமரை மலரில் இருக்கும் பிரம்மனும், சந்திரனையும், கங்கையையும் சூடியவன், ஆலகால விஷத்தையும் குடித்தவன், மற்றும் பெரும்பாலும் வணங்கி துதிக்கும் சிவந்த தாமரை போன்ற பாகத்தை உடையவளே! குங்குமம் போன்ற சிவந்த நிறத்தை கொண்டவளே என்று அபிராமி பட்டர் மனம் உருகி, பிறவாப் பெருநிலையை வேண்டுகிறார்! நாமும் அபிராமப் பட்டரை போல் பிறவாப் பெரு நிலை கிடைக்க மனம் இறங்கி வேண்டுவோம். சிவாய நம ஓம் சக்தி ஓம் சாய்
*குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் எட்டாவது பாடலுக்கு விளக்கம் :* சிவாய நம *சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரைஎல்லாம்*
*வந்தரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்*
*அந்தரி நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்*
*கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே*
உலகின் தந்தையான சிவபெருமானின் மனைவியும் எங்களின் பந்த பாசத்தை எல்லாம் அறுக்கும் வல்லமை பெற்ற குங்கும நிறத்தவளே! கர்வம் நிறைந்த மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனையும் அவனுடைய கர்வத்தையும் அழித்த வல்லமை நிறைந்த துர்கா தேவியே, என்றும் நிலைத்து நிற்பவளே, வேதங்களை உருவாக்கிய அக்னி உருவமான சிவனின் கைப்பிடித்தவளே! உன்னுடைய திருவடியை தாமரை திருவடியை என்றும் என் மனதில் நினைத்திருக்க அருள் புரிவாய் என அபிராமி பட்டர் வேண்டுகிறார். அப்படி வேண்டும் அபிராமி பட்டரின் திருவடியை வணங்கி அவருடைய வழிகாட்டுதலுடன் நாமும் பிறவா பெருநிலை வேண்டுவோம்! சிவாய நம
*குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் எட்டாவது பாடலுக்கு விளக்கம் :*
சிவாய நம
*கருத்தன எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற்*
*பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்*
*திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்*
*முருத்தன மூரலும், நீயும், அம்மே, வந்தென் முன்னிற்கவே.*
கருத்தன - உடல், நடு; கண் - வரம்; சிலை - வில் ;
சிவனிடம் வரம் வாங்கி சிவனில் பாதியைப் பெற்றவளே, உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களுக்கும் உணவு அளிப்பதற்காக தங்கம் போல் ஜொலிக்கும் மேரு மலை போல் பெருத்த தனங்களை உடையவளே, குழந்தையாய் அழுது கொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு பால் கொடுத்தவளே! சிலை என்றால் வில். உலக உயிர்களின் மீது பேரருள் பொழியும் திரிபுரசுந்தரியாய், நெஞ்சில் முத்து மணி ஆரங்களை அணிந்து உன்னுடைய சிவந்த கைகளில் கரும்பு வில் அம்பை ஏந்தி, பால் போன்ற சிரிப்புடன் தன் முன்னே வர வேண்டும் என்று அபிராம பட்டர் பாடுகிறார். உலகை காக்கும் திரிபுரசுந்தரி கோலத்தில் அபிராமியை பார்க்க மனம் உருகி பட்டர் பாடுகிறார்.
இந்த இடத்தில் இறைவன் சிவன் கூட என்னை காக்க திரிபுரசுந்தரி யாய் அன்னை இருப்பதால்தான் ஒரு நிமிடமும் யோசிக்காது ஆழகால விஷத்தை உலகைக் காக்க விழுங்கினார். அதை தன் சுட்டு விரலால் தடுத்து நிறுத்தியவள் திரிபுரசுந்தரி! இதைத்தான் ஐந்தாவது பாடலில் "அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை" என்று அபிராம பட்டர் பாடுகிறார். தன்னைக் காக்க திருபுரசுந்தரி இருப்பதினால் சிவன் எதைக் குறித்தும் கவலைப்படவில்லை. அன்னை காப்பாள் என்ற பரிபூரண நம்பிக்கை சிவனுக்கு இருப்பது போல் நமக்கும் வேண்டும். இந்த ஆழமான உட்கருத்தை புரிந்து அன்னையிடம் பரிபூரண சரணாகதி அடைபவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்! சிவாய நம
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் பத்தாவது பாடலுக்கு விளக்கம்
சிவாய நம
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்ப துன்னை,
என்றும் வணங்குவ துன்மலர்த் தாள், எழு தாமறையின்
ஒன்றும் அரும்பொருளே, அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே, அழியாமுத்தி ஆனந்தமே.
நின்றாலும் அமர்ந்திருந்தாலும் படுத்திருந்தாலும் நடந்தாலும் நினைப்பது உன்னையே! என்றும் வணங்குவது உன் தாமரை திருவடிகள்! மனதில் மறைந்திருக்கும் அரும்பொருளே, அன்பினாலும் பக்தியாலும் உன்னோடு ஒன்றும் பொழுது மறைத்தல் நீக்கி வெளிப்படுபவளே! அன்பின் உருவமே, ஒளியே, இமயத்தின் அரசனின் மகளே! என்றும் நிலைத்திருக்கக் கூடிய ஆனந்தமே என்று அபிராமி பட்டர் அன்னையின் மேல் உள்ள அன்பையும், அழியாத ஆனந்தமான அவளை நினைப்பதே பிறவியின் நோக்கம் என்பதை மிக அழகாக இந்தப் பாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார்! நாமும் இப்பிறவிக்கு ஏற்ப கடமைகளை செய்தாலும் என்றும் நிலைத்திருக்க கூடிய ஆனந்தமான அபிராமியை அவள் அருளாலே என்றும் நினைத்திருப்போம்! அவள் திருவடி பணிந்து இருப்போம்! சிவாய நம
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 11வது பாடலுக்கு விளக்கம் சிவாய நம
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான் கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
தேவர் உலகத்தில் இருப்பவர்களும் வியந்து போகும் வண்ணம் அழகாய் இருக்கும் அம்பிகை என்னுடைய உணர்வில் நிறைந்து பூரணத்தை அளிக்கக் கூடியவள் என்பதை சொல்லி அம்பிகையின் பெருமையை மிக அற்புதமாக அடுத்து இரண்டு வரிகளில் சொல்லி இருக்கிறார் அபிராமி பட்டர். அதாவது வேதம் நான்கினுக்கும் தாயானவள்! அவளுடைய திருவடி மிக உயர்ந்தது அது எப்படி என்பதை கடைசி வரிகளில் மிக அழகாக சொல்லி இருக்கிறார் சாம்பலை பூசிக்கொண்டு ஆடும் எம்பிரான் வரங்களை கொடுத்துவிட்டு தவிக்கும் பொழுது அவரை காப்பவளாக அம்பிகை இருக்கிறாள் என்பதை மிக அழகாக சொல்கிறார்! இந்த உலகத்திற்கும் இந்த உலகத்தை படைத்த நம் தந்தை சிவனுக்கும் தாயாக காப்பவளாக அம்பிகை இருக்கிறார் என்பதையும் அவளை சரணடையும் அனைவரையும் அவள் காப்பார் என்பதையும் மிக அழகாக இந்தப் பாடலில் அபிராம் பட்டர் சொல்லி இருக்கிறார்
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 12வது பாடலுக்கு விளக்கம் சிவாய நம
கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம்,
கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்,
பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து
நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
அபிராமி பட்டர் அம்பிகை தனக்கு அருள் புரியவும் வண்ணம் செய்த புண்ணியம் என்னவோ என்று உருகிப் பாடிய பாடல் இது. கண்ணியது என்றால் எண்ணுதல் என்ற பொருள் அம்பிகையின் புகழை எண்ணி அவளுடைய நாமத்தை சொல்லி உருகி, அவளுடைய இரு பாதங்களில் இரவும் பகலும் இருக்கும் வண்ணம் செய்த அன்னையே! உன் அருளை பெற எத்தனையோ புலமைப் பெற்றவர்களும் கற்றவர்களும் இருக்க அவர்கள் முன் நான் செய்த புண்ணியம் ஏது? இந்த ஏழு உலகையும் உருவாக்கியவளே என்று உருகி உருகி பாடுகிறார். அபிராமி பட்டரை போலவே நாமும் அன்னையின் இந்த கருணை உள்ளத்தை நினைந்து உருகுவோம். அபிராமி பட்டரின் வரிகளுக்கு பொருள் உணர வைத்து அவளின் பெருமையை இந்த பாடல்கள் மூலம் உள்ளத்தில் உணர வைத்து உருக வைத்துக் கொண்டிருக்கும் அவருடைய திருவடிகளை இணைந்து வணங்குவோம் . ஓம் சாய்
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 13வது பாடலுக்கு விளக்கம் சிவாய நம
பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற் கிளையவளே,
மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே?
இந்தப் பாடலிலும் அம்பிகையின் பெருமையை மிக அழகாக சொல்கிறார் அபிராமப்பட்டார் 14 உலகத்தையும் படைத்தவள் தன்னுள் அந்த உலகத்தை எல்லாம் வைத்து காத்துக் கொண்டிருப்பவள், ஆலகால விஷத்தை உண்டதன் கணவனையும் காத்தவள், எப்பொழுதும் இளமையுடன் இருக்கும் விஷ்ணுவிற்கும் இளையவளே, வலிமை உடையவளே உன்னை வணங்குவதை விட வேறு வேலை எதுவும் உண்டோ எனக்கு? மிக அழகாக சொல்கிறார் அபிராமப்பட்டர்
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 14வது பாடலுக்கு விளக்கம் சிவாய நம
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி, நின் தண்ணளியே.
உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும்! உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவர், நாராயணன், மற்றும் உன்னுடன் இணைந்திருக்கும் பரமானந்தப் பொருளான சிவபெருமானே! ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் அன்புடன் மனதில் உன்னை ஒன்றி இருப்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது என்று எப்படி அன்னையின் கருணையை எளிதில் பெற முடியும் ரகசியத்தை மிக அழகாக இங்கு எளிதாக சொல்லியிருக்கிறார் அபிராமி பட்டர். சிவாய நம
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 15வது பாடலுக்கு விளக்கம் சிவாய நம
தண்ணளிக் கென்று, முன்னே பலகோடி தவங்கள் செய்வார்,
மண்ணளிக் கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண்ண ளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண் ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.
அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! அன்னையின் கருணை பெற பல கோடி தவங்கள் செய்பவர்கள் மண்ணில் இருக்கும் தங்கம் போன்ற செல்வங்களை விரும்புவரா? அறிவில் சிறந்த விண்ணில் வாழும் தேவர்களும் தவமிருந்து வேண்டுகின்ற செல்வம் பிறப்பு இறப்பு இல்லாத அழியாத முக்தி என்று சொல்லக்கூடிய வீடு பேறு செல்வம் தான்! மற்றவை எல்லாம் அழிந்து போகக்கூடிய செல்வங்கள்! எவ்வளவு தான் இந்த பிறவியில் வளமாக நாம் வாழ்ந்தாலும் இன்பமும் துன்பமும் மாறி மாறிதான் இருந்து கொண்டிருக்கும். எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் மன நிறைவு என்கின்ற செல்வம் இறைவனை உணர்வதால் மட்டும் தான் கிடைக்கிறது. இதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அன்னையை மனம் ஒன்றி நினைக்கும் பொழுது அழியாத முக்தி செல்வத்தை கேட்கும் பொழுது மற்ற செல்வங்கள் அனைத்தும் அவளின் கருணையாலேயே கிடைத்துவிடும். சிவாய நம
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 16வது பாடலுக்கு விளக்கம் சிவாய நம
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே,
அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே.
கிளைஞர் = ரத்த சம்பந்தம் உள்ளவர்கள், கிளர்ந்தொளிரும் - மன எழுச்சி, ஒளிக்கிடமே = ஒளியாய் இதயத்தில் குடியிருப்பவள் எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே = வெளி என்றால் ஆகாயம், ஆகாயத்தை அளவிட முடியுமா? அதுபோல் நம்மால் கணக்கிடவே முடியாத அளவிற்கு எங்கும் நிறைந்திருப்பவள் என்பதை சொல்லும் மிக அழகான சொற்றொடர், அதற்கு அடுத்த வார்த்தை வெளி முதல் பூதங்கள் ஆகி என்கின்ற இந்த வார்த்தைகள் ஆகாயம் என்கின்ற பஞ்ச பூதம் முதல் கொண்டு மற்ற பஞ்சபூதங்களான நிலம் நீர் காற்று தீ என அனைத்துமாய் ஆகி எல்லா இடங்களிலும் இருக்கும் அன்னையே என்று எவ்வளவு அழகான பொருள் நிறைந்த உணர்ந்து அபிராம பட்டர் சொன்ன வார்த்தைகள். அளியேன் என்றால் பிச்சைக்காரன் எளியவன் என்ற பொருள். மாணிக்கவாசகர் நாயேன் என்று சொன்னது போல் அபிராமப்பட்டர் அளியேன் என்று சொல்கிறார். இப்படிப்பட்ட எளியவனும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையானவளும் நீயே என்று போற்றிப் பாடுகிறார். எல்லையே இல்லாத பரந்து விரிந்த, வல்லமை பெற்ற அன்னை தன்னுடைய சிறிய அறிவுக்கு புரியும் வண்ணம் எளிமையாய் இருப்பதும் அதிசயமே என்று அபிராமி பட்டர் பாடுகிறார். அதாவது அன்னையானவள் அரக்கனை அழிக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவள், அதே சமயம் எளிமையானவர்களுக்கு கருணை நிறைந்த தாயாய் இருக்கிறாள் என்று அன்னையின் குணாதிசயங்களை இந்த பாட்டின் மூலம் மிக அழகாக விளக்குகிறார். சிவாய நம
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 17வது பாடலுக்கு விளக்கம் சிவாய நம அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி
பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாக அன் றோவாம பாகத்தை வவ்வியதே?
அதி = மிக மேன்மையுடைய, சயம் = தாமரை மலர், அரவிந்தமெல்லாம்= தாமரை மலர், துதி =துதிப்பவர், துணை இரதி - ம்ன்மதன், வாமம் - இடப்பாகம், வவ்வியதே- பெறுதல் தாமரை மலர் மிகவும் மேன்மையானது, அந்த தாமரை மலரிலேயே மிகச் சிறந்ததான தாமரையைப் போன்ற வடிவை கொண்டவளே மற்ற தாமரைகள் எல்லாம் உன்னுடைய உயர்ந்த நிலையை பார்த்து துதிக்கும் சுந்தரவல்லியே ! ரதியின் துணைவனான காமனை நெற்றிக்கண்ணால் எடுத்து சாம்பலாக்கிய சிவனிடமே உன் அறிவார்ந்த திறமையினால் இடப்பாகத்தை பெற்றவளே என்று அன்னையின் பெருமைகளை மிக அழகாக இந்த பாட்டில் எடுத்துச் சொல்கிறார் அபிராமப்பட்டார்
*குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 17வது பாடலுக்கு விளக்கம்* சிவாய நம
*வவ்விய பாகத் திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்*
*செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே*
*அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து*
*வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே*
நம்முடைய தமிழில் பல விஷயங்கள் மறைபொருளாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. இறைவனும் நம்முடைய மனதில் மாயை என்னும் இருளுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறான். பக்குவ நிலை வரும் பொழுது மறைபொருளாக கொடுக்கப்பட்ட விளக்கங்களும், மறைபொருளாக இருக்கும் இறைவனும் உள்ளத்தில் உணர ஆரம்பிப்போம். அந்தப் பக்குவ நிலை வரும் வரை எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு இறைவனை பற்றி பேசினாலும் புரியாது. இந்தப் பொருளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் அபிராமி பட்டர் பாடல் வியக்க வைக்கிறது. அபிராமி பட்டர் எவ்வளவு தூரம் இறைவனின் உள்ளத்தில் உணர்ந்திருக்கிறார் என்பதும் இந்தப் பாடல் மூலம் தெரிகிறது.
"மணம்" என்றால் இணைதல். புனிதமான விஷயங்களை திரு என்ற அடைமொழி சேர்த்து சொல்வார்கள். இந்தப் பாடலில் திருமணம் என்பது அன்னையும் சிவனின் திருமண கோலத்தை சொல்வது போல் அபிராம பட்டர் சொல்லி இருப்பது உணர்வில் இறைவனோடு நாம் ஒன்றும் பொழுது அதைத்தான் அபிராமி பட்டர் சிந்தையில் என்று சொல்லியிருக்கிறார். "அவ்வியம்" என்றால் மாயை. மாயையை புரிந்து இறைவனின் திருவடியை உள்ளத்தில் உணர்ந்து பணியும் பொழுது என்ன நடக்கிறது என்பதை கடைசி வரியில் சொல்லி இருக்கிறார். அதுவும் கடைசி வார்த்தை "நிற்கவே" என்ற சொல் எவ்வளவு பொருத்தமான ஒரு சொல். இறைவனை உள்ளத்தில் உணர்ந்து ஒன்றும் பொழுது நம்முடைய கொடுமையான வினைகளின் காரணமாக நம்முடைய உடலை விட்டு ஆன்மா நீங்கும் போது, அதனை கவர்ந்து செல்ல எமன் வரும் பொழுது, எமனுடைய செயலை தடுத்து நிறுத்தும் விதமாக நம்முடைய உள்ளத்தில் ஒளிந்திருக்கும் இறைவனுடன் உணர்வினால் ஒன்றும் பொழுது மாயை என்னும் இருள் மறைந்து ஒளியாய் இருக்கும் இறைவன் வெளிப்பட, அதுவே எமன் நம்முடைய ஆன்மாவை கவர்ந்து செல்லுவதை தடுக்கிறது. இதையே மாணிக்கவாசகப் பெருமான் *கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற்போல்* என்று சொல்லி இருப்பார். இங்கே *கன்னம்* என்றால் திருடுவதற்காக மறைந்திருந்து திருடன் துளை போடுவான் அல்லவா? அந்த "மறைந்து இருத்தலைக்" குறிக்கிறது. கறந்த பாலில் நெய் மறைந்திருப்பது போல் இறைவன் ஒவ்வொரு உயிரிலும் மறைந்திருக்கிறார். சிவபுராணத்தின் அடுத்த வாரியாக சிறந்தஅடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று என்று மாணிக்கவாசகப் பெருமான் சொல்லி இருப்பார். திரும்பவும் இங்கு உண்மை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. "தே" என்றால் இறைவன். அடியவர் தன் சிந்தனையில் இறைவனுடன் முழுவதுமாக ஒன்றும் பொழுது அடுத்த வரியில் மிக அழகாக மாணிக்கவாசகப் பெருமான் பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் என்று மிக தெளிவாக சொல்லிவிட்டார். இங்கே அபிராமி பட்டர் "வெவ்விய காலன்" என்று சொல்லிவிட்டார். அதாவது திரும்பத் திரும்ப வரும் காலன், அதாவது ஒவ்வொரு பிறவியிலும் வந்து நம்முடைய ஆன்மாவை கவர்ந்து செல்லும் காலன் செயல் நிறுத்தப்படும் என்பதை அபிராம பட்டர் மிக அழகாக நான்கு வரிகளில் சொல்லியிருக்கிறார். ஆக செய்த வினைகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமைகளை செய்து கொண்டு இறைவனோடு சிந்தையில் ஒன்றுவோம். ஆன்மா காக்கப்பட்டு பிறவித்தளை அறுக்கப்பட்டு விடும். இவ்வளவு அழகாக உணர்த்திய இறைவனின் திருவடிகளை அனைவரும் இணைந்து பணிந்து வணங்குவோம். சிவாய நம
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 17வது பாடலுக்கு விளக்கம் சிவாய நம வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன, திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. மாயை என்னும் இருள் நீங்க ஒளியாய் தங்கியிருந்த இறைவன் வெளிப்பட்டதை மிக அழகாக அபிராமி பட்டர் வர்ணிக்கிறார். களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை என்றால் எல்லையற்ற மகிழ்ச்சி, முடிவே இல்லாத மகிழ்ச்சி என்ற பொருள். திகழ் என்றால் ஒளிருதல். ஞானம் என்றால் மாயை நீங்கிய உண்மை தன்மையை உணருதல். இங்கே அபிராம பட்டர் தெளிவாக இறைவனை ஒளிருபத்தில் காண்கிறார் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறார். அன்னையின் திருவுள்ளத்தை கருணையினை ஒரே வார்த்தையில் உன்னுடைய கருணை இல்லாமல் இது நடக்குமா? அவளின் கருணையினாலேயே இது நடந்தது என்பதை சொல்லி இருக்கிறார். ஸ்ரீ சக்கரத்தில் ஒன்பது முக்கோணங்கள் இருக்கிறது. இந்த ஒன்பது முக்கோணங்களும் சிவசக்தி ஸ்வரூபம். இந்த ஒன்பது முக்கோணங்களும் சிவனும் சக்தியும் இணைந்த சொரூபத்தை வெளிப்படுத்தும் முக்கோணங்கள். நம்முடைய சிந்தையில் இறைவனோடு ஒன்றும் பொழுது இறைவனை ஒளிருபத்தில் காணலாம். அப்படி ஒன்றுவதையே மறைபொருளாக ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே என்று அபிராமி பட்டர் சொல்கிறார். மேவி உறைபவளே என்றால் மனம் ஒன்றுபடும்போது இறைவன் வெளிப்பட்டு இதயத்திலேயே தங்குவதை குறிக்கும் முகமாக அபிராமி பட்டர் மிக அழகாக சொல்லி இருக்கிறார். நம்முடைய மனமும் இறை சிந்தனையில் ஒன்றை ஒளி ரூபத்தை காண இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
கொடியே, இளவஞ்சிக் கொம்பே, என க்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே,பனி மால் இமயப் பிடியே,
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, அடியேன்
இறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே.
படி - பூமி இளவஞ்சிக் கொம்பே, - படகு பழு - உருவாகுதல் வம்பு - நிலையாமை
மால் - மலை
குருவின் அருளால் அபிராமி அந்தாதியின் 18வது பாடலுக்கு விளக்கம் சிவாய நம
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, என்றன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.
அன்னையே நீ இருக்கின்ற இடத்தில் எல்லாம் உன் அன்புக் கணவர் ஒரு பக்கம் உன்னுடைய காலடியில் நான்கு மறைகள் உன்னுடைய தலையின் மேல் வெண்மையான முழுமையான சந்திரன், தாமரை இவை அனைத்தும் இருக்கும். ஆனால் என் நெஞ்சத்தில் உன்னைக் காணவில்லையே? உன்னுடன் இருக்கும் உன்னுடைய கணவர், நான் மறைகள் முழு நிலவு தாமரை இப்படி எதையும் பார்க்க முடியவில்லையே என அன்னையின் பெருமைகளை சொல்லும் விதத்தில் தன்னுடைய துயரத்தையும் வெளியிடுகிறார் அபிராமப்பட்டர்.கடலில் கண்ணு கட்டிய தூரம் வரை தண்ணீர் தான் தெரியும், தண்ணீர் அனைத்தையும் மறைத்து இருப்பது போல, நீ மறைந்து இருக்கிறாயே? முழு நிலவு தெரிவது போல் தெரிய வேண்டிய நீ இப்படி மறைந்திருக்கிறாயே என்று அபிராமி பட்டர் உள்ளத்தில் மறைந்திருக்கும் அன்னையை குறித்து மிக அழகாக பாடுகிறார். எவ்வளவு அழகான உவமைகள்! அபிராம பட்டர் போல், மாணிக்கவாசகர் பெருமாள் பிடித்த 10 பாடல்களில் உடனடியாக உன்னை காண வேண்டும் என்று வேண்டுவது போல் நாமும் நம் உள்ளத்தில் இறைவனை காண இறைவன் திருவடிகளை சிக்கென பிடித்து கதறுவோம்! சிவாய நம
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும்
அன்னே, உலகுக் கபிராமி என்னும் அருமருந்தே,
என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின் றேத்துவனே.
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,
முன்னே - மனதில்
தவம் - நினைத்து
முயலுதல்- காரியம் முற்றுப்பெறும்பொருட்டு ஊக்கத்தோடு செய்தல்
கொண்டேன் - பிடித்துக் கொண்டேன்
ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே.
புன்மொழி - இழிந்த மொழி
ஏறு - அழிதல்
நகை - நயச்சொல், நன்மொழி
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
பதயுகம் - பாதங்கள்
அடை - ஆதாரம்
Comments
Post a Comment