*அற்புதமான இறைய அனுபவப் பதிவு* கந்தர் அலங்காரப் பாடல்!
அற்புதமான இறைய அனுபவப் பதிவு
சிவாய நம,
இன்றைய தினம் 2 மணி நேரத்திற்கு முன்பு வாக்கிங் செல்லும் பொழுது ஒரு இடத்தில் நிறைய கற்கள் இருக்கும். அதனை லிங்கமாக உருவகப்படுத்தி ஒவ்வொரு முறை வாக்கிங் செல்லும் பொழுதும் மானசீகமாக வணங்குவதுண்டு.
இன்று அவ்வாறு செய்கையில் கண்டபடி அலையும் மனதை அழிக்க மாட்டாயா இறைவா? என்ற எண்ணம் தோன்றியது. அதே நேரத்தில் மனத்தை அழிக்க முடியுமா? மனம் அழிந்தால் வாழ முடியுமா? என்ன பைத்தியக்காரத்தனமான பிரார்த்தனை என்று தோன்றியது.
அதற்குப்பின் முடிந்த மட்டும் இறை நாமத்தைச் சொல்லி நடை பயணத்தை முடித்து வீட்டிற்கு வந்த பொழுது youtube நோட்டிபிகேஷன் ஒன்று வந்திருக்க அதை ஓபன் செய்த பொழுது, அந்த வீடியோவிற்கு கீழே இருந்த டைட்டில், "ஆன்மாவை அலங்கரிக்க அருணகிரிநாதர் அருளிய" என்று பார்த்த பொழுது உள் மனதில் ஏதோ ஒன்று அந்த வீடியோவை பார்க்க தூண்டியது.
கந்தர் அலங்காரத்தில் சொல்லப்பட்ட ஒரு பாடலின் விளக்கம் அது:
அந்த பாடல் வரிகள்:
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே
அந்த வீடியோவில், மேலே சொல்லப்பட்ட பாடலுக்கு விளக்கம் சொல்லப்பட்டு இருந்தாலும், ஏதோ ஒன்று அந்தப் பாடலுக்கு விளக்கம் பார் என்று உள்ளுக்குள் தூண்டியது.
இறைவன் விளக்கத்தை உணர்த்த உணர்த்த, உணர்ந்த அந்த நொடி மிக அற்புதமான ஒரு தருணம். அவர் உணர்த்திய விளக்கம் இங்கே:
"சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில்"
சேல் என்றால் மீன்கள். விவசாய காலங்களில் நெல் வயலுக்கு நீர் ஏரிகள், கால்வாயில் இருந்து வரும் பொழுது மீன் முட்டைகள், மீன் குஞ்சுகள் அந்த நீரில் வந்து நெல் வயல் மீன்களின் இருப்பிடமாக மாறிவிடுகிறது
இரண்டாவது வரியான,
"தேம் கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்"
என்பதின் பொருள், கடம்பவனத்தின் சுகந்தமான நறுமணம் கண்டு அங்கு சென்று லிங்கத்தைப் பார்த்த பொழுது, பெண்களின் மேல் மனத்தை வைத்திருந்ததால் ஏற்பட்ட சாபம் மாறியது. இந்திரன் சாப விமோசனம் அடைந்தான். மால் என்றால் இந்திரன்.
மூன்றாவது வரியான,
"மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும்"
இந்த வரியின் பொருள், வேலை என்றால் கடல். திருச்செந்தூரில் முருகனின் வேல் பட்டு மா மரமாக இருந்த சூரன் சேவல் கொடியாக மற்றும் மயிலாக மாறினான்.
நான்காவது வரி,
"வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே."
வெற்பும் அவன் என்றால் வெற்பன், அதாவது மலையும் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலத் தலைவனான முருகன். அவனுடைய திருவடிப்பட்டு அயன் என்கின்ற பிரம்மன் எழுதிய தலையெழுத்து மாற்றப்படும் என்பதுதான் இதன் பொருள்.
ஆக இறைவன் உணர்த்திய பொருள், "மனம் அழியாது ஆனால் மனம் அவன் திருவடிக்கு மாற்றப்படும் என்பதுதான் அவர் உணர்த்திய பொருளாக மனம் உணர்ந்தது."
இந்த மொத்த விஷயமும் நடந்த விதம், உள்ளே உணர்த்தப்பட்ட விதம் அந்த திகைப்பு இன்னும் மாறவில்லை.
இந்தப் பாட்டை பொருள் உணர்ந்து படிப்போம்.
நம்முடைய மனம் முருகன் திருவடியில்! அவன் திருவடியில் இருக்கும் பொழுது நம்முடைய கர்மாவினால் வந்த நம் தலை எழுத்து மாற்றப்படும் தானே!
உணர்த்திய இறைவனுக்கு இணைந்து நன்றி சொல்வோம்!
சிவாய நம
Comments
Post a Comment