குருவே இறைவன்! இறைவனே குரு! – குருவின் பெருங்கருணை!
இன்றைய தினம் விஜயதசமி நன்னாளில் 2024 ஆம் ஆண்டு குருவின் திருவருளால் உண்மைப் பொருள் அறிவோம் என்கின்ற இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு நம்முடைய தமிழில் உள்ள பொக்கிஷங்களான திருவாசகம் திருவருட்பா இதுபோன்ற எந்த பாடல்களை இறைவன் காண்பித்தாலும் அந்த பாடல்களுக்கு இறைவன் அருளால் தமிழ் அகராதி உதவியுடன் இறைவன் உணர்த்தும் உண்மை பொருளுடன் இங்கு பகிரப்படும்!
உண்மைப் பொருள் என்று சொல்லும் பொழுது இரண்டு விதமாக பொருள்படுகிறது. ஒன்று தமிழில் மறைந்துள்ள உண்மைப் பொருள் மற்றொன்று நம்முடைய உள்ளத்தில் மறைந்திருக்கும் இறைவனான உண்மைப் பொருள்! தமிழில் மறைந்திருக்கும் உண்மை பொருள் தமிழ் அகராதியுடன் உணரப்பட்டு அற்புதமான அந்த தமிழ் மூலம் உள்ளத்தில் மறைந்து இருக்கும் இறைவனை உணர முடியும்!
உண்மைப் பொருள் அறிவோம் என்கின்ற இந்த இணையதளத்தின் நோக்கம் தமிழ்ப் பாடல்களில் மறைந்திருக்கும் உண்மை பொருளையும் உள்ளத்தில் மறைந்திருக்கும் உண்மை பொருளையும் ஜாதி மத குல மொழி வேறுபாடு தாண்டி உணர்வது மட்டுமே! வள்ளலார் அவர்கள் சுத்த சிவ நிலை பாடலில்,
"தானேநான்
ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
மேகத்திற் குண்டோ விளம்பு"
இறைவன் தானே நானாகப் புரிந்தான் என்று பாடுகிறார். அதாவது இறைவனும் உயிரும் ஒன்றாக கூடிய அத்வைத நிலை! அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த உயிரிலும் எண்ணத்தாலும், செயலாலும், சொற்களாலும் எதன் அடிப்படையில் வேறுபாடு பார்க்காமல் நம்மால் முடிந்தால் உதவி செய்வோம்! முடியாவிட்டால் பிரார்த்தனை செய்வோம்! சிவாய நம
இது வீடியோ அல்ல இறைவனின் கருணையும் ஆசீர்வாதமும்
(அன்னை சரஸ்வதி மற்றும் அன்பின் உருவமான, கோடி கோடி அன்னைகளை ஒன்று சேர்த்தால் கிடைக்கும் அன்பின் உருவமான ஸ்ரீ தத்தாத்ரேயரின் இந்த வீடியோ வெறும் வீடியோ அல்ல! இதுதான் இறைவனின் தனிப்பெரும் கருணை! இதுதான் இறைவனின் அன்பு! உள்ளத்தில் உணர்வோம்! ஆனந்தம் பெறுவோம்! சிவாய நம!)
குருவே இறைவன்! இறைவனே குரு – குருவின் பெருங்கருணை
இறைவன் சீரடி சாய்நாதன் ஆக குருவாக என்னுடைய வாழ்வில் 2017ல் வந்த பொழுது, சரஸ்வதி பூஜை அன்று 108 முறை சகலகலாவல்லி பாராயணம் செய்த வருடங்கள் உண்டு!
ஆனால், 2024ல், இறைவனுக்கு என்ன செய்ய என்று யோசிக்க, மனதில் திடீரென ஒரு உந்துதல், சகலகலாவல்லி மாலைக்கு இறைவன் பொருள் பார்க்க வைத்தான்! ஒவ்வொரு முறையும் தமிழில் அவன் காட்டும் பாடலுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் பார்க்க வைக்க, ஒவ்வொரு வார்த்தையிலும் குருவின் அன்பை உணர முடிகிறது!
வள்ளலார் பெருமான் பற்றி எதுவும் தெரியாத எனக்கு, சுத்த சிவநிலை பாடலை இறைவன் காண்பிக்க, கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்கள் அந்த பாடலை தவிர வேறு எந்த பாடலையும் கேட்கவில்லை! ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் அனுபவமாக, மனம் பிரார்த்தனையில் பொன் வண்ண அடி உற்றது என்றும், "சாமா றிலைஎனக்குத் தான்" என்று வேண்டியது.
14வது பாடலில்: "தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்
தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
வந்தான்என் அப்பன் மகிழ்ந்து."
ஏக்கம் தவித்தான், இருள் அறுத்தான் என்ற வார்த்தைகளின் பொருள் புரிந்தது! "எனை ஈன்ற தந்தையே" என்று அழைக்க வந்தான் என்னப்பன் மகிழ்ந்து! வள்ளலார் பாடிய போது இறைவனை எவ்வாறு உணர்ந்து இருப்பார் என்றும் மனம் உணர ஏங்குகிறது.
திருக்குறள்:
மலர்மிசை ஏகினான் என்பதை காண்பித்தாள் பொருள் உணர, அப்பா எப்படிப்பட்ட வார்த்தைகள்! எப்படிப்பட்ட அனுபவம் திருவள்ளுவர் பெருமான் மாணிக்கவாசகப் பெருமான் வள்ளலார் பெருமான் இவர்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது கிடைத்திருக்கிறது என்று ஆச்சரியத்தில் மனம் விம்முகிறது! நம்முடைய தமிழில் திருக்குறளும், திருவாசகமும், திருவருட்பாவும் பொருள் புரிந்தால்,
"எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
ஒன்றாகி நின்றான் உவந்து."
மேலே சொல்லிய திருவருட்பா வார்த்தைகள் உள்ளத்தில் கரைந்து அனுபவமாய் நிற்கும்!
அன்னை சரஸ்வதி மற்றும் அன்பின் உருவமான, கோடி கோடி அன்னைகளை ஒன்று சேர்த்தால் கிடைக்கும் அன்பின் உருவமான ஸ்ரீ தத்தாத்ரேயரின் இந்த வீடியோ வெறும் வீடியோ அல்ல! இதுதான் இறைவனின் தனிப்பெரும் கருணை! இதுதான் இறைவனின் அன்பு!
உள்ளத்தில் உணர்வோம்! ஆனந்தம் பெறுவோம்! சிவாய நம!
இறைவன் அருளால் விஜயதசமி அன்று உண்மைப் பொருள் அறிவோம்! இணையதளத்தில் முதல் பதிவாக சரஸ்வதி தேவி நோக்கி ஸ்ரீ குமரகுருபரர் தன்னை இழிவாகப் பார்த்த நவாபை சரணடைய வைக்கும் வண்ணம் குமரகுருபர் சகலகலாவல்லி மாலையை பாடி சிங்கத்தின் மீது ஏறி நவாபின் அரசவைக்குச் சென்றார்! ஒரே இரவில் சரஸ்வதி தேவியின் அருளால் வடமொழியில் பூரணத்துவம் பெற்று நவாபை அடிபணியச் செய்து காசியில் காசி மடத்தை நிறுவினார்
பாடல் பிறந்த வரலாறு
சகலகலாவல்லி மாலை இயற்றப்பட்டதற்குக் காரணமாகச் சொல்லப்படும் தொன்மக்கதை:
ஊமையாகப் பிறந்து, முருகன் அருளால் பேச்சு வரப்பெற்றவரும், தெய்வீக ஞானியாகவும் திகழ்ந்தவர் குமரகுருபரர். துறவு பூண்ட இவர், தனது குரு மாசிலாமணி தேசிகரின் கட்டளைப்படி காசித் தலத்துக்குச் சென்றார். அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்கினார். அவரது கனவில் காட்சி தந்த அப்பகுதி இறைவனான கேதாரீஸ்வரர், தாம் பல இடிபாடுகளுக்கிடையே புதைந்திருப்பதாய்த் தெரிவித்து, அந்த இடத்தையும் கனவில் காட்டினார்
உடன் உறக்கம் கலைந்து எழுந்த குமரகுருபரர், மறுநாள் காலை தனது அடியவர்களுடன் தேடிச் சென்று அந்த இடத்தைக் கண்டறிந்தார். பின் அதனைச் சீர் செய்தவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
அப்போது காசியில் ஹிந்துஸ்தானி மொழி ஆதிக்கம் செலுத்தியது. ஷாஜகானின் மகனான தாராஷூகோ காசித்தலத்தை ஆண்டு வந்தார். உருது மொழிக்கும் அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ்மொழி மட்டுமே அறிந்திருந்த குமரகுருபரர், மன்னரின் உதவியைப் பெற்று கேதாரீஸ்வரர் கோயிலைச் சீரமைக்கவும், திருமடம் ஒன்றை அமைக்கவும் எண்ணினார். அதற்காக மன்னனைச் சந்திக்க அரண்மனைக்குச் சென்றார்.
ஆனால், குமரகுருபரரது பெருமை அறியாத மன்னன், அவரது எளிய தோற்றத்தைக் கண்டு உதாசீனம் செய்தான். அமர்வதற்கு ஆசனமும் கொடுக்கவில்லை. குமரகுருபரர் தனது வேண்டுகோளை முன் வைத்தபோதும் கூட மிக அலட்சியமாக, “நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. என் மொழியில் பேசினால் தான் நான் உங்களுக்குப் பதில் கூற முடியும். அதுவும் நான் மதிக்கத் தக்க வகையில் நீங்கள் வந்தால் தான் உங்களுடன் உரையாட முடியும்” என்று ஆணவத்துடன் பதில் அளித்தான்.
தான் நாளை வருவதாகக் கூறி அங்கிருந்து விடைபெற்றார் குமரகுருபரர்.
மறு நாள் பொழுது புலர்ந்ததும் கங்கையில் நீராடி வந்தார் குமரகுருபரர். பின் கலைவாணியை வேண்டி தியானம் செய்தார். தொடர்ந்து, கலைமகளைத் துதித்துப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். ‘சகல கலா வல்லி மாலை'யைப் பாடி முடித்தார். கலைமகளின் அருளால் உடனடியாக அவருள் ஞானம் பொங்கியது. ஹிந்துஸ்தானி மொழியின் வார்த்தைகளும் இலக்கணங்களும் முழுமையாக அறியப் பெற்றார்.
சிங்க வாகனம்
‘உன் வாகனத்தைச் சிறிது நேரம் எனக்கு இரவலாகத் தர வேண்டும்’ என்று அம்பிகையை வேண்டித் துதித்தார். உடன் அங்கே ஓர் கர்ஜனை ஒலி கேட்டது. அம்பிகையின் வாகனமான சிங்கம் அங்கே தோன்றியது. உடன் துணையாகச் சில சிங்கங்களும் அங்கே வந்து சேர்ந்தன. சிங்கம் ஒன்றின் மீது தாவி அமர்ந்து மன்னனைக் காணப் புறப்பட்டார் குமரகுருபரர். அரண்மனைக்குள் சிங்கம் நுழைந்ததும் அங்குள்ளோர் அச்சத்தில் சிதறி ஓடினர். குமரகுருபரர் சிங்கத்தின் மீது அமர்ந்து வருவதைக் கண்ட மன்னன் தாராஷூகோ அயர்ந்தான். அவர் ஒரு மகா ஞானி என்பதைப் புரிந்து பணிந்து வரவேற்றான். மன்னனிடம் குமரகுருபரர் அவனுக்குத் தெரிந்த ஹிந்துஸ்தானி மொழியிலேயே உரையாடினார். காசியில் தான் தங்குவதற்கும் திருமடம் அமைப்பதற்கும் தேவையான நிலங்கள் வேண்டுமென்று கேட்டார். மன்னன் அதற்கு, “காசியில் கருடன் பறப்பதில்லை. கருடன் வட்டமிட்டால் அவன் வட்டமிடும் இடம் முழுவதையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று வாக்களித்தான். அவ்வாறே அடுத்த நாள் காசியில் சிவபெருமானின் அருளால் கருடனைப் பறக்கச் செய்தார் குமரகுருபரர். மன்னனும் தான் கூறியவாறே கருடன் வட்டமிட்ட அந்த நிலப்பகுதியை குமரகுருபரருக்கு அளித்தான். அந்த இடம் தான் ’கேதார் காட்’ பகுதியில் இருக்கும் காசி குமாரசுவாமி மடம். தனது திருமடத்தில் நாள்தோறும் ஹிந்துஸ்தானி மொழியிலும் தமிழிலும் சொற்பொழிவாற்றித் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவைகள் புரிந்து காசியிலேயே நிறைவெய்தினார் குமரகுருபரர் .
சகலகலாவல்லி மாலை பாராயணம்
கல்வியும் ஞானமும் பெருக சரஸ்வதிபூஜைக்கு மறுநாளான விஜயதசமி அன்றுகுமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையைப் பாராயணம் செய்யும் வழக்கம் தமிழ் மக்கள் பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.
உண்மைப் பொருள் அறிவோம்
சகலகலாவல்லி மாலை 1
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான், உறங்க, ஒழித்தான் பித்து ஆக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே, சகலகலாவல்லியே
விளக்கம்:
வெண்தாமரையில் அமர்ந்திருப்பவளே, உன்னுடைய திருப்பாதம் தாங்க என்னுடைய குழந்தை போன்ற குளிர்ந்த உள்ளத் தாமரைக்கு பாக்கியம் இல்லையோ? ஏழு உலகத்தையும் அருள் புரிந்து காக்கும் விஷ்ணு உறங்க, அழிக்கும் கடவுளான சிவன் பித்தனாக, உலகத்தை உருவாக்கும் பிரம்மா விரும்பும் இனிமையானவளே! அனைத்து கலைகளுக்கும் தாயானவளே!
சகலகலாவல்லி மாலை 2
நாடும் பொருள் சுவை, சொல் சுவை தோய்தர நால் கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய், பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே, கன தனக் குன்றும், ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே, சகலகலாவல்லியே.
விளக்கம்:
அனைவரும் விரும்பும் வண்ணம் உட்பொருள் நிறைந்த, சொற்களின் இனிமையில் அனைவரும் மயங்கும் வண்ணம் என்னுடைய நாவால் பாடல்களை இயற்றும் பணியை கொடுத்து அருளுவாய்! தாமரை பூ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் மாசில்லாதவளே! பிரம்மாவிற்காக காத்திருக்கும் இனிமையானவளே! அனைத்து கலையிலும் வல்லவளே!
வார்த்தைகளின் பொருள்
கனதனக் (பிரிவுத் துயரில்)
ஐம்பால் காடும் - ஐந்து நிலங்களின் ஒன்று, முல்லை நிலம், காதலனின் பிரிவுத் துயரில் வாடுவதை குறிக்கிறது.
சகலகலாவல்லி மாலை 3
அளிக்கும் செழும் தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருள் கடலில்
குளிக்கும்படிக்கு என்று கூடும்கொலோ, உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவி மழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே, சகலகலாவல்லியே.
விளக்கம்:
நீ பிச்சை போட்ட செந்தமிழை அனுபவித்து, உன்னுடைய கடல் போன்ற அருளில் பாடும் நாள் எப்போது வரும்? உள்ளம் குளிர, உட்பொருள் நிறைந்த பாடல்களை புலவர்கள் பாட மகிழ்பவளே, மயிலைப் போல அழகானவளே! அனைத்து கலையிலும் வல்லவளே!
வார்த்தைகளின் பொருள்:
அளி - பிச்சை
பனு - உட்பொருள் நிறைந்த உரை, உபன்யாசம்
சகலகலாவல்லி மாலை 4
தூக்கும் பனுவல், துறை தோய்ந்த கல்வியும், சொல் சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய், வட நூல் கடலும்
தேக்கும் செழும் தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே, சகலகலாவல்லியே.
விளக்கம்:
உட்பொருள் நிறைந்த நூல்களையும், இனிமையான தெய்வீக சொற்களையும் அனுபவித்து பாட அருள் புரிவாய். வடமொழி அறிவும், செந்தமிழும் என் நாவில் கொடுத்து காக்கும் கருணையுடையவளே! அனைத்து கலையிலும் வல்லவளே!
சகலகலாவல்லி மாலை 5
பஞ்சு அப்பு இதம் தரு செய்ய பொன் பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே, நெடும் தாள் கமலத்(து)
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய், சகலகலாவல்லியே.
விளக்கம்:
கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சம் போல் குறையாத ஞானத்தை கொடுப்பவளே, உன் திருப்பாதம் என் நெஞ்சத்தில் மலராதது ஏனோ? மன்னன் கொடியைப் போல என் நாவில் நீ வந்து உயர்த்து, என்னுடன் கலந்தவளே! அனைத்து கலையிலும் வல்லவளே!
வார்த்தைகளின் பொருள்:
இதம் - ஞானம் தரு - கற்பக மரம் அஞ்சம் - அன்னம் கஞ்சம் - தாமரை
சகலகலாவல்லி மாலை 6
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்பொழுது எளிது எய்த நல்காய், எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெம் காலும் அன்பர்
கண்ணும் கருத்து நிறைந்தாய், சகலகலாவல்லியே.
விளக்கம்:
பாட்டும் நாடகமும், இனிமையான உபன்யாசமும் எனக்கு வருவதற்கு அருள் புரிவாய்! வேதங்களிலும் தண்ணீர், நெருப்பு, காற்றிலும் அன்புடன் நிறைந்தவளே! அனைத்து கலையிலும் வல்லவளே!
வார்த்தைகளின் பொருள்:
பண் - பாடல், பரதம் - நாடகம், கல்வி - நூல், தீஞ்சொல் - இனிய சொற்கள், பனுவல் - உபன்யாசம், எழுதா மறை - வேதம், வெங்கால் - காற்று, கண் - அருள், கருத்து - சித்தம்
சகலகலாவல்லி மாலை 7
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய், உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே, சகலகலாவல்லியே.
விளக்கம்:
நீயே பாட்டும், பொருளும், அதனால் ஏற்படும் பயனும் எனக்கு தருவாயாக. உன்னுடைய கடைக்கண் அருளால் என்னை காப்பாற்றி, எனக்கு அமுதம் அளிக்கும் பேடவளே! அனைத்து கலையிலும் வல்லவளே!
சகலகலாவல்லி மாலை 8
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே, சகலகலாவல்லியே.
விளக்கம்:
நல்ல சொற்களை பயன்படுத்தும் திறனையும், ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலையும் தந்து என்னை உன் அடிமையாக மாற்றி அருளுவாயாக. கல்வியின் பெரும் செல்வத்தை ஒருகாலமும் குறையாமல் தருபவளே! அனைத்து கலையிலும் வல்லவளே!
சகலகலாவல்லி மாலை 9
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய் ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார், நிலம் தோய் புழைக் கை
நல் குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை
கற்கும் பத அம்புயத் தாளே, சகலகலாவல்லியே.
விளக்கம்:
சொல், பொருள் ஆகிய இரண்டிற்கும் உயிராக விளங்குகிறாய். உன்னுடைய திருவடிகளை நினைத்து காத்திருப்போர் யார்? தாமரை போன்ற மென்மையான திருவடிகளைக் கொண்டவளே! அனைத்து கலையிலும் வல்லவளே!
சகலகலாவல்லி மாலை 10
மண் கண்ட வெண் குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவில் பணியச்செய்வாய், படைப்போன் முதலாம்
விண் கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ, சகலகலாவல்லியே.
விளக்கம்:
பல நாடுகளை வென்ற பெரும் மன்னர்களும் உன்னுடைய மகிமையை உணர்ந்து என் பணிவிற்கு பணியச் செய்வாயாக! கோடி தெய்வங்கள் இருந்தாலும், உன்னபோல் தெய்வம் எதுவும் இல்லை! அனைத்து கலைகளின் மேன்மையாக விளங்குகிறாய்!
இவ்வுலகைப் படைக்கும் பிரமரில் தொடங்கி விண்ணுலகில் பல கோடி தெய்வங்கள் உண்டு. எனினும், தங்களைப்போன்ற கண்கண்ட தெய்வம் வேறு யார்?
மண்ணுலகம் முழுவதையும் வெண்கொற்றக்குடையின்கீழ் ஆள்கின்ற, சிறப்புடைய மன்னர்கள்கூட, என்னுடைய பண்ணிசைப்பாடலைக் கேட்டதும் என்னைப் பணிந்து வணங்கும்படி செய்தருளுங்கள், (சிறந்த கலைத்திறனை எனக்கு வழங்கியருளுங்கள்,)
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்

This comment has been removed by the author.
ReplyDeleteஇறையருள் அம்மா.
ReplyDelete