மலர்மிசை ஏகினான் (குறள் 3) - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மலர் - தாமரை இங்கு மலர் என்பது தாமரை மலரை குறிக்கிறது. ஏன் என்றால், தாமரை மலர் மட்டும்தான் சேற்றிலே விதை போட்டு இருந்தாலும், தண்ணீருக்குள் பல அடி அதனுடைய தண்டு வளர்ந்து, சேற்றிலும் சரி, தண்ணீரிலும் சரி, ஒட்டாமல் உயர்ந்து நிற்கிறது. மிசை என்றால் உயர்ந்து என்கின்ற அர்த்தத்தை குறிக்கிறது. ஏகினான் என்றால் தனித்து இருப்பவன் என்று பொருள். தாமரை விதைகள் சேற்றிலே விதைக்கப்பட்டு, அழுக்கான தண்ணீரிலும் வளர்ந்தாலும், சேற்றிலும் தண்ணீரிலும் அது ஒட்டாமல் தனியாக உயர்ந்து நிற்பது போல், இறைவன் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா உயிர்களிலும் பொருட்களிலும் இருக்கிறான். சேறு, அழுக்கான தண்ணீர் போன்றவை மும்மலங்கள் நிறைந்த உயிர்களைக் குறிக்கின்றன. அப்படிப்பட்ட உயிர்களின் உள்ளே இறைவன் இருந்தாலும் கூட, அவன் தனித்து உயர்ந்து நிற்கிறான் என்பதை குறிக்கும் விதமாக தான் வள்ளுவர் மலர்மிசை ஏகினான் என்று மிக அழகாக இரண்டே வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். இதைத்தான் மாணிக்கவாசகப் பெருமானும் இரண்டே வார்த்தைகளில் ஏகன் அனேகன் என்று குறிப்பிட்டார். அதாவது தனித்துவம் வாய்ந்த ஏகனாக இறைவன் இருக்கிறான், அதேசமயம் அநேகனாக அனைத்து உயிர்களிலும் இருக்கிறான் என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட தனித்துவம் வாய்ந்த இறைவனின் பரிசுத்தமான திருவடியை மனதில் நினைத்து, ஒன்றி தங்களுடைய கடமைகளை செய்து வாழ்பவர், இந்த பூமியில் மற்றவர்களை விட உயர்ந்து நிலைத்து வாழ்வார் என்று திருவள்ளுவர் மிக அழகாக இறைவனை உணர்ந்து தன்னுடைய அனுபவத்தில் அறுதி இட்டு சொல்கிறார். இந்த திருக்குறளின் பொருளை ஆத்மார்த்தமாக உள்ளத்தில் உணரும் பொழுது, எப்படி திருவள்ளுவரும் மாணிக்கவாசகப் பெரும்பாலும் இறைவனை உணர்ந்து தங்களுடைய அனுபவத்தை இப்படி இரு வார்த்தைகளில் நமக்காக பதிவிட்டு சென்று இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது உள்ளம் உருகுகிறது. அப்படி உணர்ந்த அவர்களின் திருவடியையும் இந்த நேரத்தில் பணிந்து வணங்குவோம்! இந்த திருக்குறளுக்கு விளக்கம் எழுதும் பொழுது இறைவன் அருளால் கிடைத்த படம்! மலர்மிசை - இறைவன் மற்றும் தாமரை மலரின் உயர்வை வெளிப்படுத்தும் அற்புதமான தமிழ் வார்த்தை மலர்மிசை என்கின்ற வார்த்தைக்கு இறைவன், தாமரை மலர் மற்றும் அது எப்படி உயர்ந்து இருக்கிறது என்பதை உணர்த்திய பொழுது, அத்துடன் அதை உறுதி செய்யும் விதமாக இந்த விளக்கத்தை எழுதும் பொழுது கிடைத்த படங்கள் மற்றும் கிடைத்த செய்திகள் அனைத்தையும் அடியவர்களுக்காக இறைவன் அருளால் பதிவு செய்யப்படுகிறது. இதனை படிப்பவர்கள் அனைவரும் தாமரை மலர் சேறு அழுக்கான தண்ணீர் அதிலேயே வளர்ந்தும், எந்த ஒரு அழுக்கும் இல்லாமல் மலரும் தாமரை இத்துடன் மும்மலம் நிறைந்த மனிதர்களான நம்மை இணைத்துப் பார்க்க எப்படி எல்லாம் திருவள்ளுவர் பெருமான், மாணிக்கவாசகப் பெருமான் போன்றவர்கள் இறைவனை உணர்ந்து இருக்கிறார்கள் என்று நினைக்க நினைக்க அப்பப்பா என்ன ஒரு அற்புதமான ஒரு அனுபவம். இதை படிக்கும் ஒவ்வொருவரும் "மலர்மிசை ஏகினான்" என்கின்ற இரண்டு வார்த்தைகளை என்றும் மறக்கவே கூடாது. நாம் ஒவ்வொருவரும் நம்மை அந்த அழுக்கான சேறு நிறைந்தவர்களாக கற்பனை செய்து, கூடிய விரைவில் நம்முள் இருக்கும் இறைவன் இந்த தாமரை மலர் போல் நமக்குள் உயர்ந்து நம் அகத்தில் தெரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். சிவாய நம பெருமகளூர் கோவிலில் தாமரை தண்டினால் செய்யப்பட்ட லிங்கம் |
பெருமகளூர் சோமநாதர் கோயில் – ஒரு தனிச்சிறப்பு
மேலே உள்ள இந்த இரண்டு இணையதளங்களும் இறைவன் அருளால் காண்பிக்கப்பட்ட இணையதளங்கள்:
தமிழாக்கத்தின் சாராம்சம்:
பெருமகளூர் சோமநாதர் கோயில் – தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருவூரணியை அடுத்த 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமானும் குந்தலாம்பிகை (சுந்தராம்பிகை) தேவியையும் வழிபடுகிறார்கள். இது தேவர வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
இக்கோயிலின் முக்கிய சிறப்பு, சிவலிங்கம் தாமரையின் வெண்தண்டில் இருந்து உருவாகியிருக்கிறது என்பதே ஆகும். ஒரு தடவையில், சோழ மன்னனின் யானை தாமரை மலரை குளத்தில் பிடிக்க முயன்ற போது, குளத்தின் நீர் சிவப்பாக மாறியது. மன்னன் இறங்கி குளத்தில் சென்று தாமரைத்தண்டு வடிவில் ஒரு சிவலிங்கத்தை கண்டார். அதன் மீது தனது ஆபரணங்கள் அழுத்தப்பட்டதால் சின்னங்கள் ஏற்பட்டன, இன்று அவை சிவலிங்கத்தில் தென்படுகின்றன.
பக்தர்கள் சிறப்பு வழிபாடு – பெருமகளூர் என்ற பெயருக்கு "மகள்" என்பதற்கான பொருளை தலபுராணம் குறிப்பதாகும். திருமண சாதாரணம், குழந்தை பிறப்பு ஆகியவற்றிற்காக பக்தர்கள் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகிறார்கள்.
தலபுராணம் மற்றும் கோயில் அமைப்பு: இக்கோயில் ராமாயண காலத்திற்கும் முந்தியது என்று கூறப்படுகிறது. தசரத மன்னன் இங்கு சோம யாகம் செய்து வழிபட்டதாகவும், ராமர் சேதுகரை நோக்கிச் செல்லும் வழியில் இவ்விடத்தில் இறைவனை வழிபட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கோயில் அடையாளம் – மூலவர் சுயம்பு சிவலிங்கமாக இருப்பதுடன், குந்தலாம்பிகை தனிக்கோயிலில் வாசம் செய்கிறார். ப்ரஹாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், பைரவர், சந்திகேஸ்வரர், நவகிரஹங்கள் போன்ற தெய்வங்களின் சன்னிதிகள் உள்ளன.
கோயிலின் தொடர்பு மற்றும் விவரங்களுக்கு – 090479 58135 (கோயில் பூசாரியின் தொடர்பு எண்)
அர்த்தநாரீஸ்வரரின் அருள் அனுபவம்
எத்தனையோ முறை அர்த்தநாரீஸ்வரர் படத்தை பார்த்திருந்தாலும் கூட, இந்த விளக்கம் எழுதிய அடுத்த நாள், சாய் மகா பாராயணம் குழுவில் சேர்ந்த ஒரு அடியவர் இந்த அர்த்தநாரீஸ்வரர் படத்தை அனுப்பியிருந்தார். அப்பொழுது, தாமரை தண்டுடன் தாமரை மலரை பார்த்தவுடன், கண்களில் கண்ணீர் கசிந்தது. அந்த மலரின் அற்புதத்தை உள்ளத்தின் உணர்வில் உணர முடிந்தது!
இது திருக்குறளின் மூலம் இறைவன், இந்தப் பதிவை படிக்கும் அனைவருக்கும் தனிப்பெருங்கருணையுடன் அருளி இருக்கிறார் என்பதற்கான நிதர்சனமாகும். இதை உணர்ந்த அடியவர்களின் உள்ளம் உருகும், கண்களில் கண்ணீர் கசியும்!
சிவாய நம! அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
சுழுமுனை நாடி மற்றும் சகஸ்ரஹார தாமரை தத்துவங்கள்
சுழுமுனை நாடி (Sushumna Nadi):
சுழுமுனை நாடி என்பது குண்டலினி சக்தி எழும் பாதையாகும், இது மூலாதார சக்ரம் (வேர்சக்ரம்) முதல் சகஸ்ராஹார சக்ரம் வரை செல்கிறது. இவ்வெழுச்சியின் மூலம் ஒருவர் ஆன்மீக முன்னேற்றத்தை அடைகிறார். அதே போல, மலர்மிசை ஏகினான் என்னும் குறளில், தாமரை மலர் சேற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்து உயர்ந்து நிற்பதைப்போல், மனிதன் உள்ளே இருக்கும் இறைவனை உணர்ந்து உலகின் மாயையிலிருந்து (சேறு) விடுபட்டு உயர்ந்த நிலைக்கு சென்று அடைய வேண்டும் என குறிப்பிடுகிறது.
சகஸ்ரஹார தாமரை (Sahasrara Lotus):
சகஸ்ரஹார சக்ரம், மனிதனின் உயர்ந்த ஆன்மீக நிலை மற்றும் அறிவு தருவதாக கருதப்படுகிறது. இது தாமரை போன்றதே; தாமரை மலர் சேற்றிலிருந்து அழுக்கின்றி மேலே உயரும் மலர்போல், மனிதனின் ஆன்மீகப் பயணம்சேற்றான உலகைத் தாண்டி, இறைவனின் உயர்ந்த ஞானத்தை அடைய வேண்டும். இதேபோல, திருவள்ளுவர் "மலர்மிசை ஏகினான்" என்று கூறும்போது, மனிதனின் மனம் தாமரை மலர் போல் உயர்ந்து, இறைவனை உணரவேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவரின் குறளில் "மலர்மிசை" என்றால், சேற்றில் இருந்தும் உயர்ந்து விளையும் தாமரை. இதேபோல், சுழுமுனை நாடியின் வழியாக குண்டலினி சக்தி மேலே சகஸ்ரார சக்ரத்தை அடைந்து, உயர்ந்த இறைவனை (அறிவை) அடைய வேண்டும். இவ்வாறு குண்டலினி சக்தி உலகின் மாயையிலிருந்து (சேறு) விடுபட்டு இறைவனின் பரிபூரணத்தை அடைவதே ஆன்மீக நிமிர்ச்சி என்று விளங்குகிறது.
தத்துவ விளக்கம்:
இந்த தத்துவத்தை மனதில் கொண்டு, திருவள்ளுவரின் "மலர்மிசை ஏகினான்" குறளின் விளக்கம் மிக ஆழமான ஆன்மீகப் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.
சிவாய நம! அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!






Comments
Post a Comment