ஒருவரும் தேறிலர்; ஆனால் அச்சில் வார்ப்போம்!ஆகாவிட்டால் மிடாவில் வார்ப்போம்! - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!

 

 சிவாய நம, மேலே இருக்கும்  படத்தில் இருக்கும் வார்த்தைகள்  வள்ளலார் பெருமான்   அவர்கள் ஜோதியாக மறைவதற்கு முன்பு   "ஒருவரும் தேறிலர்;  ஆனால் அச்சில் வார்ப்போம்   ஆகாவிட்டால் மிடாவில் வார்ப்போம்"    என்று சொல்லிவிட்டு சென்றார்.   இதனுடைய உண்மை பொருளை  இப்பொழுது பார்ப்போம்.    விடுகதை போல் இருக்கும் இந்த வரியை   இன்னும் கொஞ்சம் புரியும் படி   இங்கு கொடுக்கப்படுகிறது. 




"ஒருவரும் தேறிலர்;  தேறினால் அச்சில் வார்ப்போம்; தேறாவிட்டால் மிடாவில் வார்ப்போம்"    வள்ளலார் சொன்ன "ஆனால்"  என்பது  "தேறினால்"   என்று பொருள்.   "ஆகாவிட்டால்"   என்பது "தேறாவிட்டால்" என்று பொருள்.  அச்சு   என்றால்  மூலப்பொருள் என்று   அர்த்தம்.   இங்கு மூலப்பொருள் இறைவனை குறிக்கிறது. மிடா   என்றால்  பானை செய்வதை குறிக்கிறது.   பானை செய்த பின்பு நெருப்பில் புடம் போடப்படும்.   ஆக  மனித பிறவி  கிடைத்து இறைவனை நினைத்து  வாழும் பொழுது  அச்சில் சேர்க்கப்படுவோம்.   அப்படி  இல்லாவிட்டால்  மீண்டும்  குயவனால் (இறைவனால்)   பல்வேறு துன்பங்களை ஆன்மா கடந்து  மீண்டும் பிறவி எடுக்கும்  என்பதுதான் இதன் பொருள். 

நாம் மனித பிறவி எடுத்ததன் நோக்கம்  இறைவனை அடைவது மட்டும் தான்.   இறைவனை அடைய   "நான்" என்பது அழிய வேண்டும்.     நாம் பிறருக்கு  கருணையுடன்  அன்புடன்  பிரதிபலன் எதிர்பாராது  எந்த அளவிற்கு  உதவ முடியுமோ அந்த அளவிற்கு உதவும் பொழுது   நம்முள் ஒளிந்திருக்கும் இறைவன்,   இதயத்தில் வெளிப்படுகிறார்.    உதவுதல் என்பது   வெறும் பணத்தால் மட்டும் அல்ல,   நம்முடைய ஆறுதல் வார்த்தைகளால்  பிறருக்கு உதவ முடியும்.   நம்முடைய பிரார்த்தனைகளால் பிறருக்கு உதவ முடியும்.     நாம் எதை செய்தாலும்  நம்மால்  அது நன்மை தீமை என்று   உறுதியாக சொல்ல இயலாது.   எனவே   எண்ணம்,  சொல், செயல் அனைத்தும்   இறைவனாலேயே  செய்யப்படுகிறது என்று  பரிபூரணமான   உறுதியுடன்   நம்முடைய கடமைகளை செய்யும்பொழுது  இருவினையும் நம்மை வந்து சேராது.    இந்த எளிய வழி நம்மை  தேற வைத்து  அச்சில் சேர்க்கும்.   "நான்" என்பது அழியாவிட்டால்,   பிறருக்கு அன்புடன் கருணையுடன்  உதவி செய்து வாழாவிட்டால்  திரும்பவும்   பிறவி சுழற்சியில்  மாட்டி  பானையாக உருவெடுப்போம்!   இதனை மிக அழகாக  ஒரே வரியில்  மிக அற்புதமாக சொல்லிவிட்டு சென்ற  வள்ளல் பெருமான் திருவடிகளை  பணிந்து வணங்குவோம்!    இதனுடைய உள் அர்த்தத்தை புரிய வைத்த இறைவன் திருவடிகளையும்  போற்றி அன்புடன் நன்றியுடன் பணிந்து வணங்குவோம்.   இது மட்டும் இன்றி  யுனைடெட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை என்கின்ற பெயரில்   நம் அனைவரையும் இணைத்து  பல்வேறு வகையில்  கொடுப்பதற்கு  உதவி செய்து கொண்டிருக்கும்  இறைவனின் அன்பை  நினைத்து நினைத்து   போற்றி  "எண்குணத்தான்" என்று  வள்ளுவப் பெருமானால்  அழைக்கப்பட்ட  இறைவனை    நம்முடைய உள்ளத்தில் என்றும் சிந்திப்போம்!   எண்குணத்தான் என்றால்   கண்டிப்பாக எட்டு வகையான குணமல்ல!     இறைவனுக்கு என்று எந்த தனிப்பட்ட வரையறை எல்லைகள் குணங்கள் எதுவும் கிடையாது!   அவனை மனதில் நிறுத்தி   சிந்தனை செய்ய   அவன் முக்திக்கு வழி காட்டுவதால்  வள்ளுவப்பெருமான்  இறைவனை   "எண்குணத்தான்" என்று   அருமையான பொருள் பட  அற்புதமான  ஒரு பெயரை  இறைவனுக்கு கொடுத்திருக்கிறார்.  இதைப் படிக்கும் இந்த நேரத்தில்  திருவள்ளுவர் பெருமானையும்  ஆத்மார்த்தமாக நினைத்து  நன்றி சொல்வோம்  அவருடைய திருவடிகளையும் பணிவோம்!  

சிவாய நம! அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

Comments

Popular posts from this blog

சாய் அருளால் அபிராமி அந்தாதி விளக்கம்!

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் பாடல் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!

*அற்புதமான இறைய அனுபவப் பதிவு* கந்தர் அலங்காரப் பாடல்!