"நீத்தார் பெருமை" என்கின்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் முழுமையாக ஐம்புலன்களை கட்டுப்படுத்தி நெறியுடன் வாழ்பவர்களின் பெருமையை விளக்குகிறார். இவ்வாறு ஐம்புலன்களை அடக்கி ஒழுக்க நெறியில் நிலைத்திருப்பவர்கள், இல்லற வாழ்வில் இருந்தாலும், துறவறம் மேற்கொண்ட முனிவர்கள் அடையும் வீடுபேற்றினை அடைய முடியும் என்று திருவள்ளுவர் உறுதியாகக் கூறுகிறார்.
குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
சொற்கள் பிரித்து விளக்கம்:
ஒழுக்கம் - ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி ஒழுக்க நெறியில் வாழ்பவர்
- ஐம்புலன்களை அடக்கி, ஒழுக்க நெறியில் வாழ்பவர்களை குறிக்கிறது. ஒழுக்கம் என்றால் ஒருவரின் ஆளுமையை ஆளும் நற்குணங்களைக் கொண்ட வாழ்வு.
அத்து நீத்தார் - துறவிகள், பிரம்ம ஞானம் பெற்றவர்கள் (அத்துவர்)
- துறவு வாழ்க்கையைப் பின்பற்றிவிட்டு, பிரம்ம ஞானத்தை அடைந்தவர்கள்.
பெருமை - புகழ்
- ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழும் இந்த துறவிகள் பெற்றுள்ள உயர்ந்த புகழ் அல்லது நற்பெயர்.
விழுப்பம் - குலம்
- ஒருவர் பிறந்த குலம் அல்லது சமூகத்தை குறிப்பது.
வேண்டும் - கண்டிப்பாக
- "வேண்டும்" என்பதன் பொருள், அவசியம் அல்லது உறுதியாக.
பனுவல் - சொல்லுதல்
- அறங்களைப் பற்றிய விளக்கங்கள் அல்லது அறிவுரைகள், குறிப்பாக பாராட்டிப் போற்றுதல்.
துணிவு - தைரியமாக
- தைரியத்துடன், எதையும் வெளிப்படையாகச் சொல்லும் மனநிலை.
முழு விளக்கம்:
திருக்குறள் 21ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், ஐம்புலன்களையும் அடக்கி ஒழுக்க நெறியில் வாழ்ந்து துறவியை அடைந்தவர்களின் புகழை அவர்கள் பிறந்த குலத்தைப் பொருட்படுத்தாமல், உறுதியுடன் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதாவது, இந்த அறத்தின் உண்மையான வழி, அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பெற்ற பெருமையை மிகுந்த தைரியத்துடன் அறிவிக்க வேண்டும் என்பதாகும். இதன்மூலம் ஒழுக்கத்தின் மகத்துவம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகப் பொது மக்களிடம் நிலைத்து நிற்கும்.
எளிய பொருள்: ஒழுக்கநெறியில் நிலைத்திருக்கும் துறவியர்களின் பெருமையை அவர்கள் பிறந்த குலத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தைரியமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
சொற்கள் பிரித்து விளக்கம்:
துணைக்கூறின் - ஒன்றைத் துணையாக (உதவியாக) வைத்து சொல்லுதல்
- ஒரு பொருளை எடுத்துக்காட்டாகக் கொண்டு, ஒப்பீடாக விளக்குவது.
துறந்தார் - ஐம்புலன்களை கட்டுப்படுத்தியவர்
- ஐம்புலன்களையும் அடக்கியவர்கள்.
வையத்து - இந்த உலகத்தில்
- "வையம்" என்பதன் அடிப்படையில் "வையத்து" என்பது "உலகத்தில்" என்று பொருள் கொள்ளப்படுகிறது.
இறந்தார் - இறந்தவர்களைக்
எண்ணிக்கொண்டு - எண்ணி அல்லது கணக்கிட்டு
- எண்ணிக்கை போட்டு, எவரும் இறந்தவர்கள் இவ்வளவென கணக்கிட முடியாது.
அற்று - அதனைப் போன்றது அல்லது அதனைப்போல் முடியாதது
- என்னும் பொருளை எடுத்துக்காட்டின் அடிப்படையில் விளக்குவது.
முழு விளக்கம்:
திருக்குறள் 22ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், இந்த உலகில் எத்தனை பேர் இதுவரை இறந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிக்கொண்டு சொல்ல முடியாது. அதுபோல, ஐம்புலன்களை அடக்கி வாழ்பவர்களின் பெருமையையும் முழுமையாகக் கணக்கிட்டு விளக்க முடியாது.
இங்கு, "துணைக்கூறின்" என்பது, இந்த உலகில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதைக் கணக்கிட முடியாதது போல, ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வாழும் துறவியரின் பெருமையையும் அளவிட முடியாதது என்பதற்கான உவமையாக பயன்படுத்தப்படுகிறது.
எளிய பொருள்:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாதது போல், ஐம்புலன்களை அடக்கி வாழ்பவர்களின் பெருமையும் அளவற்றதாகும்.
குறள் 23:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு
சொற்கள் பிரித்து விளக்கம்:
இருமை - ஐம்புலன்களினால் ஏற்படும் நன்மை தீமைகள்
- ஐம்புலன்களின் தாக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்.
வகை - வலிமை
- புலன்களின் சக்தி அல்லது வலிமை, அதன் பயன் அல்லது பின்விளைவுகள்.
தெரிந்து - உணர்ந்து
- ஐம்புலன்களின் நன்மை, தீமைகளைப் புரிந்து கொள்வது.
ஈண்டு - இந்தப் பிறவி, உலக வாழ்க்கை
- இந்த உலகில் நடைபெறும் வாழ்க்கை.
அறம் - ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வாழும் வாழ்க்கை
- ஒழுக்க நெறியைப் பின்பற்றி, ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி வாழும் முறையை குறிக்கும்.
பூண்டார் - மேற்கொள்பவர், வாழ்பவர்
- ஒழுக்க நெறியில் அடங்கி வாழ்பவர்கள், அறத்தை தங்கள் வாழ்க்கையில் கொண்டுள்ளவர்கள்.
பிறங்கு - பிரகாசம், வெளிச்சம்
- அதாவது குடத்தில் வைத்த விளக்கப் போல் இல்லாமல் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்
இற்று - எடுத்துச் சென்று சொல்லுதல்
- பின்பற்றவேண்டிய முறையாக எடுத்துச் சொல்லுவது.
உலகு - உலகோர்க்கு
- அனைவருக்கும் அல்லது பொதுவாக உலக மக்களுக்கு.
முழு விளக்கம்:
திருக்குறள் 23ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், ஐம்புலன்களினால் ஏற்படும் நன்மை தீமைகளின் வலிமையை உணர்ந்து, இந்த உலக வாழ்க்கையில் புலன்களை அடக்கி அறநெறியில் வாழும் மக்களின் பெருமையை அனைவருக்கும் எடுத்துச் செல்வது அவசியம்.
அறத்தைப் பின்பற்றி வாழ்பவர்களின் வாழ்க்கை உலக மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். அவர்களது உயர்ந்த நெறிமுறைகளை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது இந்தக் குறளின் கருத்து.
எளிய பொருள்:
ஐம்புலன்களின் நன்மை தீமைகளை அறிந்து அறத்தின் அடிப்படையில் வாழும் மக்களின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
குறள் 24:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
சொற்கள் பிரித்து விளக்கம்:
உரன் - மன உறுதி
- உறுதியான மனப்பான்மையுடன், மன உறுதி கொண்டவரை குறிக்கிறது.
தோட்டியான் - காவல் காப்பவன்
- காப்பவர் அல்லது பாதுகாப்பவரைச் சொல்லும் பெயர்.
ஓர் - அசைச்சொல்
- தனிப்படியாக பொருள் தராத சொல்; இங்கு "ஓர் ஐந்து" என்பது ஐம்புலன்களை குறிக்கிறது.
ஐந்து - ஐம்புலன்கள்
- காட்சி, கேள்வி, நுகர்வு, சுவை, தொட்டு ஆகிய ஐம்புலன்களை குறிக்கும்.
காப்பான் - கட்டுப்படுத்திக் காப்பவர்
- தன் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி காத்திருப்பவர்.
வரன் - சிறந்தவர்
- உயர்ந்த நெறியில் வாழ்பவர் அல்லது தலைசிறந்தவன்.
வைப்பு - புதையல், பொக்கிஷம்
- ஒருவர் இறந்தும் நிலைக்கும் நிஜமான செல்வம் அல்லது நிதி
வித்து - வழித்தோன்றல்
- தன்னுடைய சந்ததிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி தன்னுடைய பெருமையை, அவர்கள் பின்பற்ற வேண்டிய வழியை விட்டுச் செல்பவர்
முழு விளக்கம்:
திருக்குறள் 24ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், தன் ஐம்புலன்களை மன உறுதியோடு கட்டுப்படுத்திக் காத்து வாழ்பவனே, உண்மையில் சிறந்த மனிதராக விளங்குகிறார். அவர் தன்னுடைய அடுத்து வரும் தலைமுறைகளுக்கு பொக்கிஷமாகவும் வழித்தோன்றலாகவும் திகழ்கிறார்.
ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழ்பவரின் மன உறுதி, அவருக்கு ஒழுக்கத்திலும், அறத்திலும் பெருமையைப் பெற உதவுகிறது. தன்னுடைய வாழ்க்கை வழிமுறைகளை அவருடைய அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் அழியாத நிதியாகவும் செல்வமாகவும் விட்டுச் செல்கிறார்.
எளிய பொருள்: ஐம்புலன்களை மன உறுதியோடு கட்டுப்படுத்தி வாழ்பவர், தன்னுடைய வாழ்க்கை வழிமுறைகள் என்னும் செல்வத்தைத் தன் தலைமுறைகளுக்கு உண்மையான அழியாத பொக்கிஷமாக விட்டுச் செல்கிறார்.
குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
சொற்கள் பிரித்து விளக்கம்:
ஐந்தவித்தான் - ஐம்புலன்களை கட்டுப்படுத்தி இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்பவன்
- ஐம்புலன்களை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்பவர் அதாவது எதை செய்தாலும் இறைவனை நினைத்து செய்பவர்
ஆற்றல் - முயற்சி
- புலன்களை அடக்க முயற்சிப்பவனின் திறன் அல்லது ஆற்றல்.
அகல் - அகலுதல், தவறுதல்
- வழிதவறி துன்பங்களை அனுபவிப்பது.
விசும்புளார்கோமான் - வானுலக அரசன்
- வானுலகத்தின் தலைவன், பொதுவாக தேவர்கள், தெய்வங்கள் போற்றும் இந்திரன்.
சாலு - பொருத்தம்
- ஏதேனும் காரணத்தால் அல்லது அம்சத்தால் ஒன்று மற்றொன்றுக்கு ஏற்றதாகவோ இசைந்ததாகவோ இருப்பது
கரி - சான்று
- எடுத்துக்காட்டு அல்லது உதாரணம்.
முழு விளக்கம்:
திருக்குறள் 25ல், திருவள்ளுவர் ஐம்புலன்களை அடக்கி வாழ்கின்றவனின் முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். அப்படி புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிப் போகும் ஒருவருக்கு எடுத்துக்காட்டாக வானுலக அரசனான இந்திரன் பொருத்தமான சான்றாக விளங்குகின்றான் என்று எடுத்துக் காட்டுகிறார்.
புராணங்களின் படி இந்திரன் வானுலகத் தலைவர், ஐம்புலன்களை அடக்காததால் அகலிகையின் மேல் மோகம் கொண்டு பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது.
எளிய பொருள்:
புலன்களை அடக்காமல், அதனால் துன்பங்களை அனுபவித்ததற்கு ஒரு சான்று தேவர் உலகத் தலைவனான இந்திரன். எனவே புலன்களை கட்டுப்படுத்தாமல் அதன் போக்கில் வாழும் பொழுது எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேரும் என்று இந்த திருக்குறள் வலியுறுத்துகிறது
குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
சொற்கள் பிரித்து விளக்கம்:
செயற்கரிய - செய்வதற்கு அரிதான, ஐம்புலன்களை கட்டுப்படுத்துதல்
- குறிப்பாக ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வாழ்வது என்பதுதான் உலகத்திலேயே மிகவும் கடினமான செயல்
செய்வார் - செய்ய முடிந்தவர்
- ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வாழக் கூடியவர்கள்.
பெரியர் - உயர்ந்தவர்
- பிறவிச் சுழற்சியில் இருந்து தப்பித்து உயர்ந்த நிலை அடைபவர்
சிறியர் - தாழ்ந்தவர்
- பிறவி சுழற்சியில் மாட்டிக் கொண்டு திரும்பத் திரும்ப பிறப்பு எடுப்பவர்.
செய்கலா தார் - செய்ய முடியாதவர்
- ஐம்புலன்களை அடக்க முடியாதவர்கள்.
முழு விளக்கம்:
திருக்குறள் 26ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், ஐம்புலன்களை அடக்கி ஒழுக்கத்துடன் வாழ்வது மிகவும் கடினமான செயல். இதைச் செய்பவர்கள் பிறவிச் சுழற்சியில் இருந்து தப்பித்து உயர்ந்த நிலை அடைவார்.
இதைச் செய்ய முடியாதவர்கள், அதாவது புலன்களைக் கட்டுப்படுத்தாமல் வாழ்பவர்கள், தாழ்ந்த நிலையில் பிறவி சுழற்சியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, ஐம்புலன்களை கட்டுப்படுத்தி நெறியுடன் வாழ்பவர்களுக்கு பிறவா நிலை என்னும் உயர்ந்த நிலை கிட்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகிறது.
எளிய பொருள்:
ஐம்புலன்களை அடக்கி வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள் (பிறவா நிலை அடைபவர்கள்); அப்படி செய்ய முடியாதவர்கள் (தாழ்ந்தவர்கள்பிறவி சுழற்சியில் மாட்டிக் கொண்டு திரும்பத் திரும்ப பிறப்பு எடுப்பவர்).
குறள் 27:
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
சொற்கள் பிரித்து விளக்கம்:
சுவை - நாவால் உணருதல்
- நாக்கின் மூலம் உணரப்படும் சுவை.
ஒளி - கண்ணால் உணருதல்
- கண்ணின் மூலம் உணரப்படும் ஒளி அல்லது பார்வை.
ஊறு - தொடுவதின் மூலம் உணருதல்
- உடல் மூலம் உணரப்படும் தொட்டு உணர்தல்.
ஓசை - காதால் உணருதல்
- காதின் மூலம் கேட்டுப் புரிந்துகொள்ளும் ஒலி.
நாற்றம் - மூக்கால் உணருதல்
- மூக்கின் மூலம் உணரப்படும் வாசனை.
வகை - வலிமை
- ஐம்புலன்களின் ஆற்றல் அல்லது தாக்கம்.
தெரிவான் - உணர்ந்தவன்
- ஐம்புலன்களின் ஆற்றலை உணர்ந்து, அதனைப் புரிந்துகொள்ளும் ஆளுமை.
கட்டே - கட்டுதல், அடக்கி ஆள்தல் ("கட்டே" என்னும் இந்த வார்த்தை "ஏ"வில் முடிகிறது. "ஏ" என்னும் ஒற்றை எழுத்துக்கு கட்டுபவர் என்கின்ற பொருள் அகராதியில் இருக்கிறது)
- புலன்களை அடக்கி ஆளும் திறன்.
உலகு - உயர்ந்தோர், சான்றோர்
- உலகத்தில் வாழும் உயர்ந்த சான்றோர்கள்.
முழு விளக்கம்:
திருக்குறள் 27ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், நாக்கு, கண், தொடுதல், காது, மற்றும் மூக்கு இவை ஐந்தும் நம்மை தவறான வழிக்கு கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்தது. எனவே ஐம்புலன்களின் ஆற்றல்களை உணர்ந்து, அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவரே உலகத்தில் உயர்ந்த சான்றோராகக் கருதப்படுகிறார்கள்.
ஐம்புலன்களின் வலிமையை முழுமையாக உணர்ந்து, அவற்றை கட்டுப்படுத்தி வைத்திருப்பது மிகச் சிறந்த நெறியாகும். புலன்களை அடக்கி ஆளும் திறமைதான் மிக உயர்ந்த திறமையாக உலகத்தில் கருதப்படுகிறது,
எளிய பொருள்:
ஐம்புலன்களின் வலிமையை உணர்ந்து அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவரே உண்மையில் உயர்ந்த சான்றோராகத் திகழ்வார்கள்.
குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
சொற்கள் பிரித்து விளக்கம்:
நிறைமொழி மாந்தர் - ஞானிகள், இங்கு ஐம்புலன்களை அடக்கியவர்கள்
- அறநெறியில் முழுமையாக நிலைத்து, ஐம்புலன்களை அடக்கி வாழும் ஞானிகள்.
நிலத்து - பூமியில் வாழ்பவர்கள்
மறைமொழி - உட்பொருள் நிறைந்த நூல்கள்
- பக்தியும், ஞானமும் கொண்ட நூல்கள், நேரடியாக பொருள் புரியாத நுட்பமான கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டவை. இதற்கு எடுத்துக்காட்டாக திருக்குறள், திருஅருட்பா, திருவாசகம்போன்ற நூல்கள்.
காட்டி விடும் - எடுத்துச் சொல்லும்
- நமக்குத் தன்னுடைய மறைமொழி நூல்கள் மூலமாக உணர்த்துபவை.
முழு விளக்கம்:
திருக்குறள் 28ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், ஐம்புலன்களை அடக்கிய ஞானிகள் அடைந்த உயர்ந்த நிலையை இந்த பூமியில் உள்ள மறைமொழி நூல்கள் எடுத்துச் சொல்லுகின்றன.
இவை நேரடியாகப் புரிந்து கொள்ள இயலாததாக இருக்கும்; உட்பொருள் நிறைந்ததாக இருக்கும். இவற்றை உண்மையிலேயே முழுமையாக புரிந்துகொள்ள, இறைவன் அருள் அவசியம். திருக்குறள், திருஅருட்பா, திருவாசகம்போன்ற நூல்கள் ஞானம் நிறைந்த உள்ளுணர்வுகளை உட்பொருளாக நமக்கு வெளிப்படுத்துகின்றன.
தங்களின் புலன்களை அடக்கிய ஞானிகள் அடைந்த உயர்ந்த நிலையை முழுமையாகப் வெளிப்படயாகச் சொல்லிவிட இயலாது; இதற்கு இந்த மறைமொழி நூல்களில் மறைந்து இருக்கும் உட்பொருட்கள் சான்றாக விளங்குகிறது. இது போன்ற மறைமொழி நூல்களை மேலோட்டமாக பொருள் புரிந்து கொள்ளக் கூடாது.
எளிய பொருள்:
புலன்களை அடக்கிய ஞானிகளின் உயர்ந்த நிலையை உலகிற்கு வெளிப்படுத்த, மறைமொழி நூல்கள் மட்டுமே உண்மையான சான்றுகளாக விளங்குகின்றன.
குறள் 29:
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது
சொற்கள் பிரித்து விளக்கம்:
குணம் - மேன்மையான பண்புகள், நற்குணங்கள்
- உன்னதமான மற்றும் உயர்ந்த பண்புகள் கொண்ட மனிதர்கள்.
குன்றேறி நின்றார் - உயர்ந்த நிலை அடைந்தவர்கள், நற்குணங்களை அடைந்தவர்கள்
- குன்றின் மேல் ஏறி நிற்பதுபோல உயர்ந்த நிலை கொண்டவர்கள்; இங்கு ஆழ்ந்த ஞானம் மற்றும் ஐம்புலன்களை கட்டுப்படுத்தியவர்களைக் குறிக்கிறது.
வெகுளி - கோபம்
- உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் கோபம் கொள்வது. இவர்கள் மிக எளிதில் கோபம் கொள்ள மாட்டார்கள். அதையும் தாண்டி இவர்கள் கொள்ளும் கோபம் உலகத்திற்கு நன்மை பயப்பதாக அமையும்
கணம் - தேவர்கள்
- தேவர்களைக் குறிக்கும் சொல்.
காத்தல் அரிது - காக்க முடியாதது
- அவர்களின் கோபத்தின் விளைவிலிருந்து காப்பாற்ற இயலாத நிலை.
முழு விளக்கம்:
திருக்குறள் 29ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், மேன்மை நிறைந்த நற்குணங்களை அடைந்த முனிவர்கள் அல்லது துறவிகளை கோபப்படுத்துமாறு நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் யாரிடம் கோபப்படுகிறார்களோ, அவர்களுக்கு ஏற்படும் விளைவிலிருந்து எந்த தேவர்களும் காக்க முடியாது என்பது இந்தக் குறளின் கருத்தாகும். முனிவர்கள் கொடுக்கும் சாபத்திற்கு சாப விமோசனம் இல்லை.
உயர்ந்த நிலையில் இருக்கும் ஞானிகளை கோபமடைய வைக்கக் கூடாது, ஏனெனில் அவர்கள் கோபப்படும்போது அதன் தீய விளைவுகள் மிகுந்து, அதிலிருந்து தப்பிப்பது இயலாததாக இருக்கும்.
எளிய பொருள்:
உயர்ந்த நற்குணங்களை உடையவர்களை கோபப் படுத்தும்படி நடந்து கொள்ளக் கூடாது; அவர்கள் கோபம் கொள்வார்களானால், அதிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது.
குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
சொற்கள் பிரித்து விளக்கம்:
அந்தணர் - உயர்ந்தவர்
- பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட்டு அறத்தின் அடிப்படையில் வாழுந்து உயர்ந்தவர். அந்தணர் என்ற சொல்லுக்கு ஜாதி, குலம், மதம் என்ற எல்லை இல்லை; அறத்தை பின்பற்றுபவர்களையே அது குறிக்கிறது.
அறவோர் - அறத்தை பின்பற்றுபவர்
- தர்மத்தின்படி நடந்து கொள்பவர்களைக் குறிக்கும் சொல்.
எவ்வுயிர்க்கும் - எல்லா உயிர்களுக்கும்
- எல்லா உயிர்களுக்கும், விதிவிலக்கின்றி.
செந்தண்மை - அருள், கொடை மனப்பான்மை
- அன்பு, கருணை மற்றும் எதையும் எதிர்பாராமல் கொடுப்பது.
பூண்டு - கற்றல், ஆட்கொள்வது
- அதனை தன்னுடைய வாழ்க்கையில் அமல்படுத்தி நடப்பது.
ஒழுகல் - செயல்பாடு
- அந்த செயலை அன்போடு செயல்படுத்தி வாழும் நிலை.
முழு விளக்கம்:
திருக்குறள் 30ல், உண்மையான அந்தணர் அல்லது அறவழியில் உயர்ந்தவர் எவர் என்பதற்கான வரையறை கொடுக்கப்படுகிறது. அந்தணர் என்பது எந்தக் குறிப்பிட்ட ஜாதி அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிற பெயர் அல்ல.
எல்லா உயிர்களுக்கும், எந்த விதமான எதிர்பார்ப்புமின்றி, கருணையுடன் கொடுப்பவரே உண்மையான அந்தணர் ஆவார். இவ்வாறு செய்பவர்களே பிறவி சுழற்சியில் இருந்து விடுபட்டு உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.
செந்தண்மை என்றால் இரக்கத்துடன், கருணையுடன் செயல்பட்டு மற்ற உயிர்களுக்கு உதவுவதைக் குறிக்கிறது. தன்னுடைய செயலில் எதையும் எதிர்பாராது, அன்புடனும் கருணையுடன் கொடுப்பவரின் உயர்ந்த நிலைதான் அவரைப் பிறவிச் சுழற்சியில் இருந்து விடுவிக்கும்.
எளிய பொருள்:
எல்லா உயிர்களுக்கும் கருணையுடன் கொடுத்து உதவுபவரே உண்மையான அந்தணர், அதாவது பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட்டு உயர்ந்த நிலையை அடைபவர்.
சிவாய நம! அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
நன்முயற்சி அம்மா.
ReplyDelete